‘சுவிசேஷ குணமளிக்கும்’ கூட்டம்: தமிழக ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பணியிலிருந்து அகற்றம்

‘சுவிசேஷ குணமளிக்கும்’ கூட்டம்: தமிழக ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பணியிலிருந்து அகற்றம்
Updated on
1 min read

மத்தியப் பிரதேச மாநில சிதி தொகுதியில் லோக்சபா தேர்தல்களுக்கான பொது கண்காணிப்பாளராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சி.உமாசங்கர் தேர்தல் பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்.

தான் தங்கியுள்ள அரசாங்கம் கொடுத்த அதிகாரபூர்வ இடத்தில் இருந்து கொண்டு, ‘சுவிசேஷ குணமளித்தல்’ செயல்களில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் தேர்தல் பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டார். தேர்தல் அதிகாரிகள் இது போன்று மதம் சார்ந்த விவகாரங்களில் ஈடுபடக்கூடாது என்று பலமுறை எச்சரித்தும் அவர் ‘சுவிசேஷ குணமளித்தல்கள்’ கூட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதாக புகார் எழுந்தது.

இவரை நீக்கியதையடுத்து இமாச்சலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சந்திரகர் பார்தி இவரது பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

சிதி மாவட்ட மருத்துவமனைக்கு தன் தலைவலிக்கு சிகிச்சை பெறச் சென்ற சி.உமாசங்கர் மருத்துவமனையில் உள்ள பிற நோயாளிகளுக்கு சுவிசேஷ குணமளித்தல் ஆசிர்வாதங்களைச் செய்துள்ளார்.  இதைப்பார்த்த மருத்துவர்கள் உமாசங்கருக்கு அறிவுரை கூறும்போது, “உங்களுக்கே உடம்பு சரியில்லை, உங்களுக்கே ஓய்வு தேவைப்படுகிறது... இந்நிலையில் உங்களுக்கு இது தேவையா?”என்று கேள்வி கேட்டுள்ளனர்.

ஆனால் தொடர்ந்து தான் தங்கியிருக்கும் இடத்தில் தொடர்ந்து அவர் குணமளிப்பு கூட்டங்களை நடத்தியதால் புகார்கள் எழுந்தன, எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால் அவர் கேட்கவில்லை.

இத்தகைய சர்ச்சைகளுக்கு உமாசங்கர் புதிதல்ல, 2015-ல் தமிழகத்தில் அவர் பொறுப்பில் இருந்த போது பொது இடங்களில் கிறித்துவத்தை பிரச்சாரம் செய்ததற்காக அப்போது அவர் தமிழக அரசினால் எச்சரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in