

இந்திரா குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் என மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
இப்போது ‘இந்திரா அவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்கள் வீடு கட்டிக் கொள்வதற்காக மத்திய அரசு ரூ.70,000 நிதியுதவி வழங்குகிறது. இந்த திட்டத்தின் பெயரை ‘தேசிய கிராமின் அவாஸ் மிஷன்’ என மாற்றியமைப்பதற்கான முயற்சியில் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
இதுதொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள திட்ட அறிக்கையில், “வீடு கட்டுவதற்காக இப்போது வழங்கப்படும் நிதியுதவி போதுமானதாக இல்லை. இதை ரூ.1.5 லட்சமாக அதிகரிக்க வேண்டும். மலைப்பகுதியாக இருந்தால் சற்று கூடுதல் தொகையை வழங்க வேண்டும். அதேநேரம் குடியிருப்புடன் கழிப்பறையையும் கட்டாயமாக கட்ட வகை செய்ய வேண்டும். மேலும் குடியிருப்பின் அளவை 20 சதுர மீட்டரிலிருந்து 30 சதுர மீட்டர்களாக அதிகரிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.