Last Updated : 20 Apr, 2019 05:33 PM

 

Published : 20 Apr 2019 05:33 PM
Last Updated : 20 Apr 2019 05:33 PM

அம்பேத்கரை இழிவுபடுத்தியவர்களுக்காக வாக்கு சேகரிக்கிறார் மாயாவதி: யோகி குற்றச்சாட்டு

பாபா சாஹேப் அம்பேத்கரை இழிவுபடுத்தியவர்களை கூட்டணி என்றபெயரில் சேர்த்துக்கொண்டு அவர்களுக்காக ஓட்டு கேட்டு வருகிறார் மாயாவதி என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று மொராதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:

எவ்வளவு கேவலமாக அரசியல் போய்க்கொண்டிருக்கிறது என்பதை இப்போது நீங்கள் பார்க்க முடியும். பாபா சாஹேப் அம்பேத்கரை இழிவுபடுத்தியவர்களுக்காக  மாயாவதி இன்று பிரச்சாரம் செய்கிறார். இந்தியாவுக்கு யார் மதிப்பு தரவில்லையோ அவர்கள் வாக்கு பெறுவதற்கும் தகுதியானவர்கள் இல்லை.

மெகா கூட்டணி என்ற பெயரில் இணைந்துள்ள கட்சிகள் ராம்பூரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் ஆஸம் கானை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அது மட்டுமின்றி பொதுக்கூட்டத்தில் அவர்களை ஆதரித்துப் பேசியுள்ளார். சமாஜ்வாதி கட்சியினர் அம்பேத்கரை இழிவுபடுத்தியதை மறந்துவிட்டாரா?

ஏற்கெனவே இங்கு ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சியோ, பகுஜன் சமாஜ் கட்சியோ நிதிப்பற்றாக்குறை என்று காரணம் காட்டி ஏழைகளுக்கு வீடுகட்டித் தரும் திட்டத்தையே கைவிட்டனர். அவர்கள் ஆட்சியில் விவசாயிகள் பெரும் பிரச்சினைகளை சந்தித்தனர். அவர்கள் பசியைப் போக்கவில்லை. கஜானாவில் இருந்த பணம் எல்லாம் ஊழலிலேயே கரைந்துபோனது.

மாநிலத்தில் பாஜக அரசு செய்துள்ள அனைத்துப் பணிகளுக்கும் சரியான கணக்குகள் உண்டு. வளர்ச்சித் திட்டங்களை மோடிஜி அறிவிக்கும்போது எந்த வித ஜாதி மதங்களையும் பார்ப்பதில்லை. அதற்குக் காரணம் அவர் செய்யும் பணிகளின் நோக்கம் எல்லாம் ''அனைவருக்கும் வளர்ச்சி.. ஒவ்வொருக்குமான வளர்ச்சி'' என்பதுதான்.

இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x