Last Updated : 01 Apr, 2019 12:24 PM

 

Published : 01 Apr 2019 12:24 PM
Last Updated : 01 Apr 2019 12:24 PM

70 ஆண்டுகளாக பாகிஸ்தான் செய்ய முடியாததை மோடி, அமித் ஷா 5 ஆண்டுகளில் செய்துவிட்டார்கள் : கேஜ்ரிவால் கடும் தாக்கு

இந்தியாவை மதரீதியாகப் பிளவுபடுத்திவிடலாம் என்று பாகிஸ்தான் கடந்த 70 ஆண்டுகளாக முயற்சித்து செய்ய முடியாததை பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் கடந்த 5ஆண்டுகளில் செய்துவிட்டார்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 175 சட்டப்பேரவைக்கும் வரும் ஏப்ரல் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரத்தில் தெலுங்கு தேசம், காங்கிரஸ், பாஜக, ஒய்எஸ்ஆர் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் விசாகப்பட்டினம் நகரில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நேற்று எதிர்க்கட்சிகள் சார்பில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் அரவிந்த் கேஜ்ரிவால்  பேசியதாவது:

''இந்தியாவை மதரீதியாகப் பிளவுபடுத்த பாகிஸ்தான் கடந்த 70 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் 70 ஆண்டுகளாக செய்ய முடியாததை, பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் 5 ஆண்டுகளில் செய்துவிட்டார்கள்.

சுதந்திரத்துக்குப் பின் நாடு சந்திக்கும் மிகப்பெரிய ஊழல்வாதி மோடி. அவருடன் சேர்ந்து அமித் ஷா நாட்டை அழித்துவிட்டார்.

இந்தியாவின் மிக உயர்ந்த மதிப்புகளான சகோதரத்துவம், ஒற்றுமை உள்ளிட்டவற்றுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை இருவரும் விளைவித்துள்ளனர். ஒரு சாதிக்கும் எதிராக மற்றொரு சாதியினரைத் தூண்டிவிடுகிறார்கள். நாட்டில் அவசர நிலை போன்ற சூழல் நிலவுகிறது. மத்திய அரசின் நிறுவனங்களை ஏவி மக்கள் மீதும், அமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்துகிறார்கள்.

பாஜக எம்.பி. சாக்சி மகராஜ் சமீபத்தில் ஒரு கருத்து கூறியிருந்தார். அதில் இந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின் நாட்டில் தேர்தலே வராது என்றார். ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்ததும், ஜெர்மனியின் அரசமைப்புச் சட்டத்தை மாற்றி, சாகும் வரை ஆட்சியில் இருந்தார். மோடியும், அமித் ஷாவும் இந்தியாவில் ஹிட்லரைப் போன்றவர்கள். மகராஜ் கூறியதைப் போல், 2019-ம் ஆண்டுக்குப் பின் தேர்தல் இருக்காது.

ஜெய்ப்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா பேசுகையில், 2019-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால் 2050-ம் ஆண்டு வரை பாஜகவை யாராலும் வீழ்த்த முடியாது. அவர்கள் அனைவரும் ஒரேமாதிரியாகச் சிந்திக்கிறார்கள்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை சுதந்திரத்துக்குப் பின் நடந்த மிகப்பெரிய ஊழல். மோடி பட்டப்படிப்பு கூட முடிக்காதவர். நல்ல எண்ணம் இல்லாதவர். யாருடைய அறிவுரையையும் மோடி கேட்கமாட்டார், அமித் ஷா அறிவுரையைத் தவிர. இருவருக்கும் நாட்டின் பொருளாதாரம் குறித்து ஏதும் தெரியாது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிமுகப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிட்டார்கள்.

சந்திரபாபு நாயுடுவை மக்கள் மீண்டும் தேர்வு செய்ய வேண்டும். மீண்டும் ஆட்சிக்கு வந்தால், புதிய ஆந்திராவைக் கட்டமைப்பார். சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகியும், டெல்லி மாநிலமாக அங்கீகரிக்கப்படவில்லை. வாக்களிக்கும் போது, ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்காத மோடியை மறக்காதீர்கள்''.

இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால்  பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x