

ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவம் நடந்து இன்றுடன் 100 ஆண்டுகள் ஆகும் நிலையில், உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த விடுதலை போராட்டத்தை நசுக்க 1919-ல் ரவுலட் சட்டம் அமலாக்கப்பட்டது. இதை எதிர்க்கும் வகையில், அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக்கில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கூடினர். ஆங்கிலேயரை எதிர்த்து சுதந்திரப் போராட்டப் பாடல்களையும் கூட்டத்தினர் பாடிக்கொண்டிருந்தனர்.
அங்கு தன் படையுடன் வந்த ஆங்கிலேய அதிகாரியான ஜெனரல் டயர், கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 1600-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரத்திற்கும் அதிமானவர்கள் படுகாயம் அடைந்தனர். பிரிட்டிஷ் வரலாற்றில் அவமானமாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் தெரஸா மே, சமீபத்தில் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். இந்தப் படுகொலை சம்பவம் நடந்து இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது.
இதையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், “100 ஆண்டுகளுக்கு முன், நமது சுதந்திரப் போராட்டத் தியாகிகள் ஜாலியன்வாலா பாக்கில் உயிர்த்தியாகம் செய்தனர். அது ஒரு கொடூரமான படுகொலை, மனித நாகரிகத்தின் மீது படிந்த ஒரு கறை. அந்த தியாக தினத்தை ஒருபோதும் மறக்க முடியாது. உயிர்நீத்த தியாகிகளுக்கு நாம் மரியாதை செலுத்துவோம்” என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “ஜாலியன்வாலா பாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது. நாட்டின் முன்னேற்றத்துக்கு மேலும் கடுமையாக உழைக்க ஜாலியன்வாலா பாக் நினைவு உத்வேகம் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதுபோலவே ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.