Last Updated : 14 Apr, 2019 03:11 PM

 

Published : 14 Apr 2019 03:11 PM
Last Updated : 14 Apr 2019 03:11 PM

அப்துல்லாவையும் முப்தியையும் தேசத்தைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: பிரதமர் மோடி சூளுரை

ஜம்மு காஷ்மீரை 3 தலைமுறைகளாக ஆண்டுவரும் அப்துல்லா குடும்பத்தாரையும், முப்தி குடும்பத்தாரையும் தேசத்தைத் துண்டாட நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று பிரதமர் மோடி சூளூரைத்தார்.

சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சியின் உமர் அப்துல்லா தங்கள் மாநிலத்துக்கு தனியாக பிரதமர் தேவை என்று கோரிக்கை எழுப்பியிருந்தார். அதை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி காட்டமாகப் பேசினார்.

ஜம்மு காஷ்மீரின் கதுவா நகரில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

''ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைக் கடந்த 3 தலைமுறைகளாக அப்துல்லா, முப்தி குடும்பத்தாரும் ஆண்டுவிட்டார்கள். மூன்று தலைமுறைகளாக மாநிலத்தைச் சுரண்டிவிட்டார்கள். மாநிலத்தின் எதிர்காலம் கருதி, அவர்களை மக்கள் விரட்டியடிக்க வேண்டும். இவர்களைத் தோற்கடித்தால்தான், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பான எதிர்காலம் அமையும். ஒட்டுமொத்த குடும்பத்தாரையும் அரசியலுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள். அவர்களின் நோக்கம் நாட்டைத் துண்டாடவேண்டும் என்பதுதான். ஆனால், அதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

மாநிலத்தில் நடந்த முதல்கட்ட வாக்குப்பதிவில் ஏராளமான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளார்கள். இந்த அதிகமான வாக்குப்பதிவின்  மூலம் தீவிரவாதத் தலைவர்கள், சந்தர்ப்பவாதிகள், எதிர்க்கட்சிகள் அனைவரும் அச்சமடைந்திருக்கிறார்கள். முதல்கட்ட வாக்குப்பதிவில் மாநில மக்கள் ஜனநாயகத்தின் வலிமையை நிரூபித்துவிட்டார்கள்.

காங்கிரஸ் கட்சி கொடிய விஷக்கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையில், காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ராணுவத்தின் ஆயுதப்பிரிவு சிறப்புச் சட்டம் நீக்கப்படும் என்றுவாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பாதுகாப்புப் படையினர் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். தேசப்பற்று மிக்கவர்கள் இதுபோன்று பேச முடியுமா? நம்முடைய பாதுகாப்புப் படையினருக்கு அச்சுறுத்தல் விளைவிக்குமாறு செயல்படக்கூடாது.

ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு தினத்திலும் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது. பஞ்சாபில் குடியரசு துணைத் தலைவர் ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும்போது, அங்கு முதல்வர் செல்லவில்லை. அந்த நினைவு நாளை பஞ்சாப் முதல்வர் அவமதித்துவிட்டார்.

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்கைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அவரின் தேசபக்தியைப் பற்றி குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள நெருக்கடியையும் என்னால் புரிந்து கொள்ள முடியாது.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக நமது விமானப்படை வீரர்கள் பாகிஸ்தானின் பாலகோட்டில் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலை காங்கிரஸ் கட்சியால் நம்ப முடியாமல் ஆதாரம் கேட்கிறது. நமது ராணுவத்தினர் மீது காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ராணுவம் என்பது பணம் ஈட்டும் கருவி''.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x