அடையாள அட்டைகள் இன்றி வாக்களிக்க வந்தவர்கள் அதிகாரிகளுடன் மோதல்: உ.பி.யில் துப்பாக்கிச் சூடு

அடையாள அட்டைகள் இன்றி வாக்களிக்க வந்தவர்கள் அதிகாரிகளுடன் மோதல்: உ.பி.யில் துப்பாக்கிச் சூடு
Updated on
1 min read

அடையாள அட்டைகள் இன்றி வாக்களிக்க வந்த சிலர் கடும் மோதலில் ஈடுபட்டதால் துணை ராணுவப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நேற்று நடந்தது.

உத்தரப் பிரதேசம் ஷாம்லி மாவட்டத்தில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து ஷாம்லி காவல் ஆய்வாளர் அஜய் குமார் தெரிவித்த விவரம்:

''முசாஃபர் நகர் மக்களவைத் தொகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இங்கு காந்தளா காவல்நிலைய எல்லைக்குள் காய்ரனா அருகே ரசூல்பூர் குஜ்ரான் கிராம வாக்குச்சாவடியில் நேற்று சுமுகமாகத்தான் வாக்குப்பதிவு தொடங்கியது.

எனினும் அங்கு வாக்களிக்க வந்த சிலரிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதது தெரியவந்தது. அடையாள அட்டை கொண்டுவராத நிலையில் அவர்களை வெளியேற்ற அதிகாரிகள் முயன்றனர். ஆத்திரமடைந்த அவர்கள் வெளியேற மறுத்ததோடு வலுக்கட்டாயமாக மீண்டும் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்களிக்க முயன்றனர்.

இவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது அவர்கள் அதிகாரிகளுடன் கடும் மோதலில் ஈடுபட்டனர். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனினும் அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்திலும் மோதலிலும் ஈடுபட்டதால் பொறுமையிழந்த துணை ராணுவப் படையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர திடீரென வானை நோக்கிச் சுட்டனர்.

ஆனால் நிலைமை சீரடையாமல் பெரும் குழப்பம் அங்கு ஏற்பட்டது. வாக்காளர்கள் அங்குமிங்குமாக சிதறி ஓடியதால் வாக்குச்சாவடி பணிகள் முற்றிலும் முடங்கின. செய்தி அறிந்த உள்ளூர் சரக காவல் அதிகாரிகள் அங்கு விரைந்தனர்''.

இவ்வாறு மாவட்ட காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் அடையாள அட்டை கொண்டுவராமல் மோதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அகிலேஷ் சிங் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசம் நாட்டின் மிகப்பெரிய எண்ணிக்கையிலான மக்களவைத் தொகுதிகள் உள்ள மாநிலம் என்பதால் இங்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in