மோடி ஆட்சியில்  நினைவில் வைக்கக்
கூடியது பசு குண்டர்கள், கும்பல் வன்முறை: ஒவைசி சாடல்

மோடி ஆட்சியில் நினைவில் வைக்கக் கூடியது பசு குண்டர்கள், கும்பல் வன்முறை: ஒவைசி சாடல்

Published on

பிரதமர் மோடி ஆட்சி என்றாலே சிறப்பாக நினைவில் வைக்கக் கூடியது கும்பல் வன்முறைதான் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் ஒரு ஹோட்டலில் மாட்டிறைச்சி விற்பனை  செய்த முஸ்லிம் முதியவர் ஒருவரை ஒரு கும்பல் இழத்துவந்து அடித்து துன்புறுத்தியது. அவரைப் பன்றிக் கறி சாப்பிடககூறி வற்புறுத்தினார்கள். இது தொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகின.

இதுகுறித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி ஹைதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அசாமில் மாட்டிறைச்சி விற்பனை செய்த முஸ்லிம் முதியவர் ஒரு அடித்து துன்புறுத்தப்பட்ட காட்சியை பார்த்தேன். இதுபோன்ற சம்பவங்கள் அனைத்தும், மோடி பிரதமராக இருந்த ஒட்டமொத்த வாழ்க்கையில் இதை தடுக்க முடியாமல் போனார் என்பதை குறிப்பிடும்.

68-வயது முதியவர் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்தார் என்பதற்காக ஒருகும்பல் அடித்து துன்புறுத்தியது உண்மையில் கொடூரமானது. அந்த முதியவர் கடந்த 35 ஆண்டுகளாக மாட்டிறைச்சி விற்பனை செய்து வருகிறார். இந்த சம்பவத்தில் அந்த முதியவரை அடித்து உதைத்து, அவர் வாயில் வலுக்கட்டாயமாக பன்றி இறைச்சியை திணிக்கிறது அந்த கும்பல்.

இதுபோன்ற குண்டர்கள் மனிதர்களாக இருக்கக்கூட தகுதியில்லாதவர்கள், அவர்கள் மிருகங்கள்.

நரேந்திரமோடியின் ஆட்சியில் மிகவும் சிறப்பாக நினைவு கூறத்தக்கது என்னவென்றால், அவர் காலத்தில் நடந்த கும்பல் வன்றைதான். இதுபோன்ற பசு குண்டர்கள் நடத்தும் வன்முறை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.

கும்பல் வன்முறையில் ஈடுபடுபவர்கள், பசு குண்டர்கள் அனைவரும் மோடியின் ஆதரவாளர்கள். பிரதமர் மோடி தங்களின் கொள்கைகளுக்கும், சித்தாந்தத்துக்கும் ஆதரவு அளிப்பார் எனத் தெரிந்து கொண்டு துணிச்சலாக செயல்படுகிறார்கள்.

லவ்ஜிஹாத், கர் வாப்ஸி, கும்பல் வன்முறை, பசு குண்டர்கள் வன்முறை போன்றவை 2014-ம் ஆண்டு மோடி பிரதமராக வந்தபின் உருவானவை.

இதுபோன்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்துவந்து மோடி இரக்கத்தை, கருணையை வெளிப்படுத்தி இருப்பாரா. கும்பல் வன்முறையை சகிக்கமாட்டேன், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்று திட்டவட்டமாக மோடி கூறியிருப்பாரா.

பாஜக தேர்தல் அறிக்கையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்வோம் என்று கூறப்பட்டுள்ளது. இதுபோல் எத்தனை ஆண்டுகளுக்கு மக்களை ஏமாற்றப்போகிறார்கள்.

கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தது. ஜம்மு காஷ்மீரில் பிடிபியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது 370 சட்டப்பிரிவை ரத்து செய்யவில்லை, முடியாமல் போனது, தேர்தல் வரும்போது மட்டும்தான் ரத்து செய்வோம் என்று மிகவும் மலிவான, ஏமாற்று அரசியலை நடத்துகிறார்கள்.

மோடி தான் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பொய்களின் உற்பத்தி தொழிற்சாலை மோடி. வரும் மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பின் பாஜக எதிர்க்கட்சி வரிசையில் அமரும். மோடி மோசமாக தோற்பார்

இவ்வாறு ஒவைசி தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in