Published : 07 Apr 2019 12:00 AM
Last Updated : 07 Apr 2019 12:00 AM

‘உங்கள் எதிர்காலம் என் கடமை’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சந்திரபாபு நாயுடு

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு,‘உங்கள் எதிர்காலம் என் கடமை’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார்.

ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை அமராவதியில் நேற்று வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான வயது உச்ச வரம்பு 65 லிருந்து 60 ஆக குறைக்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ‘மஞ்சள்-குங்குமம்’ திட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்படும். காலியாக உள்ள அனைத்து அரசுப் பணியிடங்களும் நிரப்பப்படும். மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெறலாம். சந்திரண்ணா காப்பீடு திட்டத்தின் உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்ணின் திருமணத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும். ஏழைகள் அனைவருக்கும் இலசவமாக வீடு கட்டித்தரும் திட்டம் அமல்படுத்தப்படும்.

விவசாயிகளுக்கு இலவசமாக 12 நேர மின்சாரம் வழங்கப்படும். 1 கோடி மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு இலவசமாக ஸ்மார்ட் போன்கள், பெண் ஊழியர்களுக்கு மானிய விலையில் இரு சக்கர மோட்டார் பைக் வழங்கப்படும். நெசவாளர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் அறிக்கை வெளியீடுஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் நேற்று தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், விவசாயிகளுக்கு முதலீடாக ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும். அரசு ஒப்பந்தப் பணிகள் அனைத்தும் வேலையில்லா இளைஞர்களுக்கு வழங்கப்படும். ஆட்சிக்கு வந்ததும் பூரண மது விலக்கு அமல்படுத்தப்படும். நட்சத்திர அந்தஸ்து உள்ள ஓட்டல்களில் மட்டுமே மது அருந்தஅனுமதிக்கப்படும். 18 முதல் 60 வயது வரை யார் இயற்கையாக இறந்தாலும், ஒய்.எஸ்.ஆர். ஜீவன பீமா பெயரில் ரூ. 1 லட்சம் வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் கட்டணம் வெகுவாக குறைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x