உச்ச நீதிமன்றத்தில் தோனி முறையீடு:அமரபள்ளி ரியல் எஸ்டேட் ரூ.40 கோடி மோசடி
அமரபள்ளி ரியல் எஸ்டேட் நிறுவனம் தனக்கு தர வேண்டிய வீட்டையும், விளம்பரத் தூதராக நடித்தமைக்காக தர வேண்டிய ரூ.40 கோடியையும் வழங்க உத்தரவிடக்க கோரி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் அமரப்பள்ளி ரியல் எஸ்டே நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தின் சார்பில் கட்டப்பட்ட அமரப்பள்ளி சஃபாரி குடியிருப்பில் கிரிக்கெட் வீரர் தோனி ஒரு வீடு வாங்கி இருந்தார். மேலும், அமரப்பள்ளி நிர்வாகம், தங்கள் நிறுவனத்தின் விளம்பரத் தூதராகவும் தோனியை நியமித்தனர். பல்வேறு விளம்பரங்களில் அமரப்பள்ளி நிறுவனத்துக்காக தோனி நடித்துக்கொடுத்தார்.
ஏறக்குறைய 2009 முதல் 2016-ம் ஆண்டுவரை பல்வேறு விளம்பரங்களில் அமரப்பள்ளி நிறுவனத்துக்காக தோனி நடித்தார்.
ஆனால், திடீரென அமரப்பள்ளி நிர்வாகம் நிதிநெருக்கடியில் சிக்கியது. வீடு முன்பதிவு செய்தவர்களுக்கு குறித்த நேரத்தில் வீட்டை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஏற்கனவே வீட்டுக்காக பணம் அளித்த 46 ஆயிரம் பேர் அமரப்பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் அளித்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தோனி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமரப்பள்ளி ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்காக பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்தேன் அதற்கான நிலுவை தொகை ரூ.40 கோடியை வழங்கவில்லை அதை பெற்றுத்தரக் கோரி மனுத் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமரப்பள்ளி நிறுவனத்தின் சொத்துக்கள், அதன் துணை நிறுவனத்தின் சொத்துக்களை முடக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், தோனி சார்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில்ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமரப்பள்ளி ரியல்எஸ்டேட் நிறுவனத்தில் தான் வீட்டுக்கு பணம் செலுத்தி இருந்தேன். அந்த வீட்டை இன்னும் வழங்கவில்லை. அந்த வீட்டை நீதிமன்றம் கையகப்படுத்தி தனக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
