

முத்தலாக் பிரச்சினையில் பெண்களுக்கு வக்காலத்து வாங்குபவராக தன்னைக் காட்டிக்கொள்ளும் பிரதமர் மோடி ஒரே ஒரு தலாக்கூட சொல்லாமல் தன் மனைவியைப் புறக்கணித்தவர்தான் என்று ராஷ்டிரிய லோக் தளம் கட்சித் தலைவர் அஜித் சிங் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மிகப்பரிய மாநிலமான உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் போட்டியிடுகின்றன. முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் கட்சியான ராஷ்ட்ரிய லோக் தளக் கட்சியும் இதில் போட்டியிடுகிறது. அஜித் சிங் முசாபர் நகர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
நேற்று பாக்பத் நகரில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
''பிரதமர் மோடி தான் எப்போதும் பொய்யே பேசுவதில்லை என்று கூறி வருகிறார். ஆனால் இன்றுவரை அவர் உண்மையே பேசியதில்லை. குழந்தைகளுக்கு பெரியவர்கள் பொய் சொல்லக்கூடாது என்றுதான் கற்பித்து வளர்ப்பார்கள்.
ஆனால் மோடியின் பெற்றோர்களோ அவருக்கு அதைச் சொல்லவில்லை போலிருக்கிறது. மேலும் மோடி தான் எப்போதும் பெண்களின் உரிமைக்காக முத்தலாக் விஷயத்தில் அவர்களுக்கு வக்காலத்து வாக்குபவர் என்று கூறிக்கொள்கிறார். ஆனால் அவர் தன் மனைவியைப் புறக்கணித்துள்ளார். மூன்று தலாக் அல்ல; ஒரே ஒருமுறைகூட தலாக் சொல்லாமல்தான் அவர் தன் மனைவியைத் தள்ளி வைத்துள்ளார்''.
இவ்வாறு பிரச்சார பொதுக்கூட்டத்தில் அஜித் சிங் பேசினார்.
அஜித் சிங் மகனும் இத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் பாக்பத் தொகுதியில் களத்தில் உள்ளார். முசாஃபர் நாடாளுமன்றத் தொகுதி அஜித் சிங் மற்றும் அவரது தந்தை சவுத்ரி சரண் சிங் ஏற்கெனவே பலமுறை வெற்றிபெற்ற தொகுதியாகும்.