Published : 27 Apr 2019 04:03 PM
Last Updated : 27 Apr 2019 04:03 PM

பணமதிப்பிழப்பு, ‘கப்பர் சிங்’ வரிக்கொள்ளை போன்ற முட்டாள்தனம் எதையும் 70 ஆண்டுகளில் யாரும் செய்ததில்லை: ராகுல் காட்டம்

கடந்த 70 ஆண்டுகால ஆட்சிகளில் பணமதிப்பிழப்பு, கப்பர்சிங் வரிக்கொள்ளை போன்ற முட்டாள்தனம் எதையும் வேறு யாரும் செய்ததில்லை என்று ராகுல், பிரதமர் மோடியை விமர்சித்து காட்டமாக தாக்கிப் பேசியுள்ளார்.

தேசிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் பேசியதாவது:

கடந்த 70 ஆண்டுகால ஆட்சிகளில் பணமதிப்பிழப்பு, கப்பர் சிங் வரிவிதிப்பு போன்ற முட்டாள்தனத்தை வேறு யாரும் செய்தததில்லை. மோடி ஆட்சியில்தான் இது நடந்திருக்கிறது.

சுதந்திரம் அடைந்தபிறகு நாட்டின் அனைத்து நோய்மைகளுக்கும் காங்கிரஸ்தான் பொறுப்பு என்பதுபோல திரும்பத்திரும்ப ஒன்றையே மோடி பேசி வருகிறார். 

ஆனால் கடந்த 5  ஆண்டுகளில் இந்த வாட்ச்மேன் (சவுக்கிதார்) என்ன செய்தார் தெரியுமா? தொழிற்சாலைகளிலும் ரேபரேலி மற்றும் அமேதி (ராகுல் தொகுதி) தொகுதி மக்களின் வேலைவாய்ப்பையும் அவர் திருடியுள்ளார்.

கிட்டத்தட்ட 22 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை நிரப்புவதற்கு மனமில்லாதவராக மோடி இருந்துவருகிறார். மக்களே நீங்கள் சொல்லுங்கள், அனில் அம்பானி, விஜய் மல்லையா, லலித் மோடியெல்லாம் எங்கே இருக்கிறார்கள், சிறையிலா? வெளியிலா?

இன்னொரு பக்கம், ஜிஎஸ்டி வரி என்ற பெயரில் மிகப்பெரிய கொள்ளை நடக்கிறது.

இந்த கப்பர் சிங் வரிக்கொள்ளையின்மூலம் நமது பாக்கெட்களிலிருந்து உங்கள் பாக்கெட்களிலிருந்து பிரதமர் மோடி பணத்தை திருடி எடுத்துக்கொண்டு விடுகிறார். காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்திற்கு மீண்டும் வரும்பட்சத்தில் இவை மீண்டும் உங்கள் பாக்கெட்டுக்கே வந்துசேரும் என்று உறுதியளிக்கிறேன்.''

இவ்வாறு தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.

மோடி அரசு விதித்த சரக்கு மற்றும் சேவை வரியைத்தான் 'கப்பர்சிங் வரிக்கொள்ளை' என்கிறார் ராகுல் காந்தி. ஷோலே திரைப்படத்தில் வில்லனாகத் தோன்றும் நடிகர் அம்ஜத்கான் கப்பர் சிங் என்ற வில்லன் பாத்திரத்தில் ஊரைக்கொள்ளை அடிக்கும் கொள்ளைக் கூட்டத் தலைவனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x