பிஹாரில் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற கிராமம்; தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவிப்பு

பிஹாரில் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற கிராமம்; தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவிப்பு
Updated on
1 min read

அடிப்படை வசதிகளைச் செய்து தராமல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த தத்தா கிராமம்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமோ, அரசியல்வாதிகளோ இக்கிராம மக்களின் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் அவர்கள் தெரிவித்தனர்.

மூன்று பக்கங்களிலும் புதிகண்டாக் ஆறு சூழ்ந்திருக்க பெகுசராய் மாவட்டத்தில் சாலை ஒன்று உள்ளது. அவ்வழியேதான் தான் மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு அவர்கள் சென்றாக வேண்டும். ஆனால் அந்தச் சாலையும் பாழடைந்த நிலையில் அவ்வழியைப் பயன்படுத்த முடியாத நிலையே உள்ளது. இதனால் தத்தா கிராம மக்கள் படகில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

தங்கள் மோசமான நிலைக்குத் தீர்வு காணப்படாத அரசாங்கத்தை எதிர்த்து உள்ளூர் கிராம மக்கள் அனைவரும் வாக்களிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.

தத்தா கிராமவாசி கீதா தேவி இதுகுறித்துப் பேசுகையில், ''எங்கள் கிராமத்தில் எந்த மருத்துவ வசதியும் இல்லை. அருகில் உள்ள ஊருக்குத்தான் மருத்துவமனையை நாடிச் செல்ல வேண்டும்.

காலை 8 மணிக்குள் அங்கு சென்றாக வேண்டும். சாலை வசதி இல்லாத காரணத்தால் எங்கள் கிராமத்தின் கர்ப்பிணிப் பெண்களும் மாணவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எங்களுக்கு ஒன்று ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித் தரவேண்டும் அல்லது சரியான சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் அதுவரையில் மொத்த கிராமமும் தேர்தலைப் புறக்கணிக்கும்.முதலில் ரோடு, அப்புறம் ஓட்டு'' என்றார்.

ஆற்றைக் கடந்து தினமும் பள்ளி சென்றுவரும் மாணவரும் இதையே பிரதிபலித்தார். ''நாங்கள் ஏன் படகைப் பயன்படுத்துகிறோம் என்றால் பயன்படுத்தமுடியாத அளவுக்கு சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனாலேயே நான் பள்ளிக்கு அடிக்கடி தாமதமாகச் செல்ல வேண்டியுள்ளது. வேறு வழியில்லை. ஆனால் இதை அரசாங்கம் சரிசெய்வதற்காக எதையும் செய்யவில்லை'' என்று குற்றம் சாட்டினார் அந்த மாணவர்.

இதன் உச்சபட்ச ஓலமாக படகோட்டியின் சோகம் அமைந்துள்ளது. போக வர என்று ஒருநாளைக்கு அவர் 200 முறை படகைச் செலுத்துகிறார்.

இப்பிரச்சினை வெளியே வந்தபிறகு வேட்பாளர்கள் தேடி வருவார்கள்; வாக்கு சேகரிக்க வாக்குறுதிகளை மீண்டும் அளிப்பார்கள்.  ஆனால் வாழ்வாதாரத்திற்கு உறுதியளிப்பார்களா என்பதுதான் தெரியவில்லை என்பதே தத்தா கிராமவாசிகளின் கருத்தாக உள்ளது.

பிஹாரில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களில் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in