Last Updated : 01 Apr, 2019 10:49 AM

 

Published : 01 Apr 2019 10:49 AM
Last Updated : 01 Apr 2019 10:49 AM

எமிசாட் உள்பட 28 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி ராக்கெட்

பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(டிஆர்டிஓ) எமிசாட் செயற்கைக் கோள், பிறநாடுகளின் 28 சிறிய செயற்கைக்கோள்கள் ஆகியவற்றைத் தாங்கிக்கொண்டு, பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது.

ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவண் விண்வெளி மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை சரியாக 9.27 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் 749 கி.மீ தொலைவில், அதாவது செலுத்தப்பட்ட 17 நிமிடங்களில் எமிசாட் செயற்கைக்கோள் விடுவிக்கப்பட்டது. மற்ற செயற்கைக்கோள்கள் 504 கி.மீ தொலைவில் அதாவது 40 நிமிடங்களில் விடுவிக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்தது.

27 மணி நேர கவுன்ட் டவுன் ஞாயிற்றுக்கிழமை காலை 6.27 மணிக்குத் தொடங்கியது, கவுன்ட் டவுன் நிறைவு பெற்றதும் காலை விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி ராக்கெட். இந்த ராக்கெட்டுடன் அமெரிக்காவின் 24 செயற்கைக் கோள்களும்,  லிதுவேனியா நாட்டின் 2 செயற்கைக் கோள்களும், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் சார்பில் தலா ஒரு செயற்கைக் கோளும், டிஆர்டிஓ சார்பில் எமிசாட் செயற்கைக் கோளும் செலுத்தப்பட்டது.

இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட எமிசாட் செயற்கைக்கோளானது பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்காக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளின் மொத்த எடை 436 கிலோவாகும்.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறுகையில், " இது  எங்களுக்கு மிகச்சிறப்பான திட்டம். 4 விதமான நிலைகளை பிஎஸ்எல்வி ராக்கெட்டில் பயன்படுத்தி இருக்கிறோம். முதல்முறையாக பூமியின் வெவ்வேறு நீள்வட்டப் பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட உள்ளன " எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x