

பிரதமர் மோடிபோல் கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் இருக்கமாட்டோம், நியாய் திட்டம் மூலம் ஏழை மக்களின் வங்கிக்கணக்கில் 5 ஆண்டுகளில் ரூ.3.60 லட்சம் டெபாசிட் செய்வோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சி நியாய் திட்டம், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்யும் திட்டமாகும். இஞ்சின் செயல்பட டீசல் எவ்வாறு தேவையோ, அதேபோல, தேசத்தின் பொருளாதாரம் செயல்பட இந்த நியாய் திட்டம் உறுதுணையாக இருக்கும்.
நாங்கள் ஆட்சிக்குவந்த ஒரு ஆண்டுக்குள் மத்திய அரசியல் இருக்கும் 22 லட்சம் காலி இடங்கள் நிரப்பட்டு இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவார்கள், பஞ்சாயத்து அளவில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். வங்கியில் பயிர்கடன் பெற்று திருப்பிச் செலுத்தாவிட்டால், எந்த விவசாயியும் இனி சிறை செல்லத் தேவையில்லாத அளவுக்கு சட்டம் கொண்டு வருவோம்.
மோடி வங்கிக்கணக்கு மட்டும் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார், ஆனால், ஒரு ரூபாய் கூட செலுத்தவில்லை. வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்றார், ஆனால், அது பொய்யானது, நிறைவேற்ற முடியாதது.
ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 5 கோடி பெண்களின் வங்கிக்கணக்கில் 5 ஆண்டுகளில் ரூ.3.60 லட்சம் நியாய் திட்டம் மூலம் டெபாசிட் செய்வோம்.
நான் இங்கு பொய் பேசவரவில்லை. எங்களின் நியாயம் திட்டம் பொருளாதாரத்தை வேகப்படுத்தும், ஊக்கம் அளிக்கும். ஏழை மக்களின் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் குறைந்தபட்ச வருவாய் உருவாக்குவதை உறுதி செய்வோம். நாங்கள் இந்ததிட்டத்தை பல்வேறு பொருளாதார நிபுனர்களுடன் கலந்தாய்வு செய்தபின்புதான் கொண்டு வந்துள்ளோம். பொருளாதாரத்துக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல், ஏழை மக்களை உயர்த்த வருவாய் அளிக்க முடிவு செய்தோம்.
நாங்கள் பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசித்த பின், மூத்த தலைவர் சிதம்பரம் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் ரூ.72 ஆயிரம் வழங்கலாம் என்றார். அதன்படி 25 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவோம். 5 ஆண்டுகளில் வங்கிக்கணக்கில் ரூ.3.60 லட்சம் வழங்குவோம். இந்த பணம் அனைத்தும் குடும்பத்தின் தலைவியின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்வோம்.
ஆனால் பிரதமர் மோடி தன்னுடைய நெருங்கிய தொழிலதிபர் நண்பர்கள் 15 பேருக்கு கோடிக்கணக்கில் அளித்து உதவியுள்ளார். நாங்கள் ஏழைகளுக்கு மட்டும்தான் உதவுவோம். மக்களின் பணம் அடிப்படை கட்டமைப்பை வளர்க்க உதவ வேண்டும். புதிய மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உருவாக்கப்படும், இலவசமாக மருந்துகள், சிகிச்சைகள் மக்களுக்கு அளிக்கப்படும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.