

காஷ்மீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய ரஷ்ய பெண்கள், மீட்பு படையினருடன் வர மறுத்து, முதலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும்படி ராணுவத்தினரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் கடந்த ஐந்து நாட்களாக பெய்த கன மழை, அங்கு மிகப் பெரிய வரலாற்று பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளப்பெருக்கால் சூழப்பட்ட பகுதிகளிலிருந்து இதுவரை 76,500 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 215 பேர் பலியாகி உள்ளனர். முப்படைகளும் மீட்பு பணியில் இணைந்துள்ள போதிலும், சுமார் 4 லட்சம் பேர் மழை வெள்ளத்தில் அடிப்படை தேவைகள் எதுவும் இன்றி சிக்கி தவிக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) ஸ்ரீநகரில் வெள்ளத்தால் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்த மக்களை படகு மூலம் மீட்கும் நடவடிக்கையில் ராணுவத்தினர் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது அங்கு கடந்த மூன்று நாட்களாக சிக்கியிருந்த ரஷ்ய பெண்களை மீட்க முயன்றபோது பாதுகாப்புப் படையினருடன் அவர்கள் வர மறுத்தனர்.
உடல் நிலை பாதிக்கப்பட்ட நிறைய பேர் சிக்கி இருப்பதால், அவர்களுக்கு முன்னுரிமை அளித்து முதலில் மீட்க வேண்டும் என்று ரஷ்ய பெண்கள் இருவரும் ராணுவத்தினரிடம் முறையிட்டுள்ளனர்.
காஷ்மீர் நகரங்களில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்துவரும் வேளையில், அங்குள்ள கிராமங்களில் மோசமான நிலை நீடித்து வருகிறது. இதனால் கிராம பகுதிகளிலும் மீட்பு பணிகளை முடுக்கிவிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.