பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக்கொண்ட தலித் இளைஞர்

பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக்கொண்ட தலித் இளைஞர்
Updated on
1 min read

தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தலித் இளைஞர், தனது விரலையை வெட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

உ.பி.யில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றன. புலந்த்ஷெஹரில் இக்கூட்டணி சார்பில் யோகேஷ் சர்மா என்ற வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.

புலந்த்ஷெஹரின் சாந்திபூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அப்துலாபூர் ஹுலஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பவன் குமார். 25 வயதான இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். பகுஜன் சமாஜ் சார்பில் யோகேஷ் சர்மாவுக்கு வாக்களிக்க விரும்பினார் பவன்குமார்.

தனது கிராமத்திலேயே அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்குத் தனது சகோதரருடன் சென்றார். ஆனால் தவறுதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக வேட்பாளர் போலா சிங்குக்கு வாக்களித்துவிட்டார். இதனால் மனமுடைந்தார் பவன்குமார். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தமுடியாமல், தனது விரலையே துண்டித்துக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து பவன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வீடுதிரும்பிய பவன்குமார் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in