

குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வாக்களித்தனர்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்தப்படுகிறது.மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைக்கு முதல்கட்டமாக கடந்த 11ம் தேதி 91 தொகுதிகளுக்கும், 2வது கட்டமாக கடந்த 18-ம் தேதி 95 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.
குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. குஜராத்தில் உள்ள காந்திநகர் தொகுதியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அகமதாபாத் வந்திருந்தனர். அகமதாபாத்தில் உள்ள தன்னுடைய தாயின் இல்லத்துக்கு இன்று காலை பிரதமர் மோடி சென்றார்.
அங்கு தனது தாய் ஹிராபென் மோடியிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார். அதன்பின், பிரதமர் மோடிக்கு அவரின் தாய் ஹிராபென் மோடி உணவு அளித்தார், பிரதமர் மோடியும் தனது தாய்க்கு ஊட்டிவிட்டார். அதன்பின் தனது தாய்க்கு வாங்கி வந்திருந்த புடவையை மோடி பரிசாக அளித்தார்.
தனது தாயின் வீட்டில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, ரானிப் பகுதியில் உள்ள நிஷான் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்துக்கு வந்தார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் தனது வாக்கை பதிவு செய்ய முன்பே அங்கு வந்திருந்தார்.
வாக்குப்பதிவு மையத்துக்கு வந்த பிரதமர் மோடி, அங்கிருந்த ஒருவரின் குழந்தையை வாங்கிக் கொஞ்சினார். அதன்பின் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மோடி, தனது வாக்கை முறைப்படி பதிவு செய்தார். பாஜக தலைவர் அமித் ஷாவும் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.
வாக்களித்தபின் பிரதமர் மோடி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் " மூன்றாவது கட்டத் தேர்தல் நடந்து வருகிறது. என்னுடைய சொந்தமாநிலத்தில் வாக்களிக்க இந்த முறை எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கும்பமேளாவில் புனிதநீராடியபோது கிடைத்த மனநிறைவைப் போன்று, ஜனநாயகத் திருவிழாவான தேர்தலில் வாக்களித்தபின் எனக்கு நிம்மதி கிடைத்துள்ளது. ஈஇடி வெடிமருந்தைக் காட்டிலும் வாக்காளர் அடையாள அட்டை வலிமை வாய்ந்தது. தகுதியுள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். " எனத் கேட்டுக்கொண்டார்.