

இலங்கையில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல் தொடர்பாக, கேரளாவில் காசர்கோடு, பாலக்காடு நகரில் இன்று தேசிய புலனாய்வு அமைப்பினர் 3 இடங்களில் ரெய்டு நடத்தினர். இதில் இளைஞர் ஒருவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவருக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பினருடன் தொடர்பு இருக்கிறதா, இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கிறதா என்ற என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இரு இளைஞருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்காக அழைப்பு விடுத்துள்ளது என்ஐஏ.
இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், " கேரளாவில் உள்ள காசர்கோடு, பாலக்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சமீபத்தில் வெளிநாடு சென்று ஐஎஸ் அமைப்பில் பயிற்சி எடுத்துவந்துள்ளதாக தகவல் கிடைத்தது.
அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் ஜஹிரன் ஹசிமுடன் நெருங்கியதொடர்பில் இருந்தனர் என்றும் தகவல்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் ரெய்டு நடத்தப்பட்டு 3 இளைஞர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம்.
பாலக்காட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர் எங்கள் அலுவலகத்துக்கு அழைத்து விசாரணை நடத்தி வருகிறோம். அதேபோல, கொல்லங்கோடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் அபுபக்கர், அகமது ஆகிய இரு இளைஞர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். இவர்கள் இருவரும் கொச்சி அலுவலகத்துக்கு நாளை விசாரணைக்காக வர உள்ளனர் " எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே இஸ்லாமிய மதப் பிரச்சாரகர் ஜாகீர் நாயக்கிற்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ நடத்திய ரெய்டில், ஏராளமான மொபைல் போன்கள், சிம்கார்டுகள், மெமரி கார்டுகள், பென்டிரைவ்கள், டைரிகள், அரபி மற்றும் மலையாளத்தில் எழுதப்பட்ட குறிப்புகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ஏராளமான சிடிகளில் இஸ்லாமிய மதம் குறித்த பிரச்சாரங்கள் அடங்கியுள்ளன.
இதற்கிடைய காசர்கோட்டைச் சேர்ந்த 14 பேர் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றியபோது ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டு அங்கு சேர்ந்துள்ளனர் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.