

ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களுக்குள் கறுப்புப் பணம் மீட்கப்படும் என்று 2014 தேர்தலுக்கு முன் கூறிய வாக்குறுதியையே பிரதமர் மோடி இன்னும் நிறைவேற்றவில்லை என்று சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர் தனஞ்செய் மகாதிக்கை ஆதரித்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கோலாப்பூர் மக்களவைத் தொகுதியில் நேற்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சரத்பவார் பேசியதாவது:
''பதவிக்கு வந்ததும் 100 நாட்களுக்குள் கறுப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வரவில்லையென்றால் பொதுஇடத்தில் தூக்கில் தொங்கத் தயார் என்று மோடி கூறினார்.
ஆனால் கறுப்புப் பணம் வெளியே வரவில்லை. பொது இடத்தில் யாரும் தூக்கில் தொங்கவேண்டுமென்பதில் நம் எவருக்கும் ஆர்வம் இல்லையெனினும் வாக்குறுதி என்னவாயிற்று என்பதுதான் கேள்வி.
அதேபோல மத்திய அமைச்சர் உமா பாரதி டிசம்பர் 2017-ல் கங்கையை சுத்தம் செய்யப்போவதாக அறிவித்தார். அதையும் ஞாபகப்படுத்துகிறேன். கங்கை நதி சுத்தம் செய்வதற்கான திட்டத்தை தொடங்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அக்டோபர் 2018 வரை கூட தொடங்கவில்லை. புனித நதியின் தூய்மை கெட்டுப்போய் உள்ளது. ஆனால் சுத்தம் செய்யும் எண்ணமே அவர்களுக்கு இல்லை.
மகாராஷ்டிராவில் ஆளும் தேவேந்திர பட்நாவிஸ் அரசும் மராட்டிய சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு தகுதியை அளிக்க வேண்டும் என்பதை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை.
முதலில் பாஜக அரசு மராட்டிய மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்று எண்ணியது. இதற்கு எதிராக யாரோ ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் அதை அடியோடு மறந்துவிட்டது.
பாஜக அரசு மக்களை முட்டாளாக்கி வருகிறது. விவசாயிகள் மற்றும் ஏழைகள் தொடர்பாக எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் இருக்கும் இந்த அரசு பதவியில் இருக்க எந்த உரிமையும் இல்லை''.
இவ்வாறு சரத்பவார் பேசினார்.