Published : 02 Apr 2019 03:32 PM
Last Updated : 02 Apr 2019 03:32 PM

மத்திய அரசு பணியிடங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, மீனவர்களுக்கு தனி அமைச்சகம்: காங். தேர்தல் அறிக்கை

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கு கொண்டுவரப்படுவதோடு, மத்திய அரசுப்பணியிடங்களிலும் 33 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இருந்து வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ப.சிதம்பரம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

வேலைவாய்ப்பு

1. 2019, ஏப்.1 ம்தேதியில் மத்திய அரசு, மத்திய அரசின் நிறுவனங்கள், நீதித்துறை, நாடாளுமன்றம் ஆகியவற்றில் 4 லட்சம் பணியிடங்கள் காலியாகிறது.

2. மாநில அரசுகளுடன் இணைந்து ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும், நகர உள்ளாட்சி அமைப்புகளிலும்  புதிதாக 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க சேவா மித்ரா அமைப்பு உருவாக்கப்படும்.

3. அரசு தேர்வுகள், அரசு பதவிகளுக்கான விண்ணப்பிக்கும்போது கட்டணம் வசூலிக்கும் முறை ரத்து செய்யப்படும்.

4. புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் கட்டுமானம், ஜவுளித்துறை, தோல் தயாரிப்பு, கற்கள், நகைகள் வடிவமைப்பு, பொழுதுபோக்கு, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு விருதுகளும், நேரடி வரிக் குறைப்பும், சிஎஸ்ஆர் பங்களிப்பும் குறைக்கப்படும்.

5.தொழில்துறை, சேவை, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்காக தனியாக அமைச்சரவை உருவாக்கப்படும்.

6. பள்ளிக்கல்வி மட்டும் படித்திருப்பவர்களுக்காக 2 முக்கிய திட்டங்கள் வகுக்கப்பட்டு, கிராமங்கள், நகர்புறங்களில் நடைமுறைப்டுத்தப்பட்டு  குறைந்த வேலைத்திறன் உடையவர்களுக்காக ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

தொழில்துறை

1. மேக் பார் தி வேர்ல்டு திட்டம் தொடங்கப்பட்டு, அதில் இந்திய, அன்னிய நிறுவனங்கள் முதலீடு செய்ய ஊக்கப்படுத்தப்பட்டு ஏற்றுமதிக்கு ஊக்கம் அளிக்கப்படும்.

2. அனைத்து மாநில அரசுகளுடன் பேசி, மாநிலங்களில் அனைத்து வகையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிதாக தொழில்நகரங்கள் உருவாக்கப்படும். அனைத்து வகையான பொருட்களும் தயாரிக்கும்வகையில் உற்பத்தி முனையாக மாற்றப்படும்.

3. கடந்த 5ஆண்டுகளாக வரித்துறை அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கும், நடவடிகைக்கும் தொழில்துறையினர் ஆளானார்கள். வரித்தீவிரவாதம் இருந்தது. சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி விசாரணை அமைப்புகள் தொழில்துறையினருக்கு இடையூறு செய்தனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் ஆய்வு செய்யப்பட்டு, தேவையில்லாத நடவடிக்கை தடுக்கப்பட்டு, தொழில்துறையினர் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் தொழில் செய்ய வழிவகை செய்யப்படும்.

கிராமப்புற மேம்பாடு:

1. மகாத்மா கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் காலம் 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும்.

2. 250 மக்கள்வரை இருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி, 2021-ம் ஆண்டுக்குள் கிராமங்களில் பிராண்ட்பேண்ட் இன்டர்நெட் வசதி செய்யப்படும்.

அமைப்பு சாரா தொழிலாளர்கள்

1. அமைப்பு சாரா தொழிலில் பணியாற்றுவோருக்கு குறைந்தபட்ச ஊதியம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

2. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்தில்இடம் பெயர்ந்து பிழைப்பு நடத்தும் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, அனைத்து பொருட்களும் கிடைக்க வழி செய்யப்படும்.

3. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அஜீவா கேந்திரா பெரு நகரங்கள், சிறுநகரங்களில் உருவாக்கப்படும். இதன் மூலம் அவர்கள் சுகாதாரம், அரசு சேவைகள், தொழில்பயிற்சி, சட்ட உதவி ஆகியவற்றைப் பெற முடியும்.

மீனவர்கள்:

1. நாட்டில் உள்ள மீனவர்களின் நலன் கருதி தனியாக மீனவர்கள் நலனுக்காக அமைச்சரவை உருவாக்கப்படும்

2. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களை சந்திக்கிறார்கள். குறிப்பாக பாகிஸ்தான், இலங்கையின் கடற்படையின் அச்சுறுத்தல்களை சந்திக்கிறார்கள். மீனவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படா வகையில் நிரந்தர தீர்வு காண அண்டை நாடுகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னாள் ராணுவத்தினர்

1. முன்னாள் ராணுவத்தினருக்கான ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு செயப்படுத்தப்படும் என்பதை உறுதியளிக்கிறோம்.

2. 40 வயதுக்கு முன் ஓய்வு பெறும் ராணுவ வீரர்களை தகுதியான மத்தியப்படைகளில் நியமிக்க அனுமதிக்கப்படுவார்கள்

3. வீரமரணம் அடையும் வீரர்களின் குடும்பங்கள் முழுமையான இழப்பீடு பெறவும், அதாவது படிகள், குழந்தைகள் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை பெற கொள்கை உருவாக்கப்படும்.

பெண்களுக்களுக்கான திட்டம்

1. மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்படும்.

2. மத்திய அரசின் பணியிடங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவரதிருத்தம் கொண்டுவரப்படும்.

3. வெளியூர்களில் பணிபுரியும்  பெண்களுக்கு இரவு நேர பாதுகாப்பான தங்கும் விடுதி உருவாக்கப்படும்.போதுமான அளவில் சுகாதாரமான கழிப்பறைகள் உருவாக்கப்படும். பொது இடங்களில் பெண்களுக்கு சானிட்டரி நேப்கின்கள் வழங்கும் எந்திரம் நிறுவப்படும்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x