

உ.பி.யில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி), அகிலேஷின் சமாஜ்வாதி(எஸ்பி), அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்எல்டி) ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் சில சிறிய கட்சிகளை தம்முடன் இணைத்து போட்டியிடுகிறது. எனினும், இந்தக் கட்சிகளின் முக்கிய நோக்கம் மோடியை மீண்டும் பிரதமராக வராமல் பார்த்துக் கொள்வதாக உள்ளது.
இதனால், காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளில் உயர் வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தி பாஜக வாக்குகளை பிரிக்க முயல்கிறது. இதன்மூலம் மெகா கூட்டணிக்கு பலன் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதேநேரத்தில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களால் பாஜக லாபம் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் இதுவரை அறிவித்துள்ள வேட்பாளர்களில் 6 பேர் முஸ்லிம்கள். இவர்கள் அனைவருமே முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் கொண்ட பதான்யூ, சந்த் கபீர் நகர், சஹரான்பூர், கேரி, பிஜ்னோர், சீதாபூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
சஹரான்பூரில் காங்கிரஸின் இம்ரான் மசூதை எதிர்த்து பிஎஸ்பியின் ஹாஜி பஜுலூர் ரஹ்மான் போட்டியிடுகிறார். இருவருமே முஸ்லிம்கள் என்பதால் அங்கு பாஜக வேட்பாளரின் வெற்றி உறுதி எனக் கருதப்படுகிறது. பதான்யூவில் சமாஜ் வாதி சார்பில் அகிலேஷ் குடும்பத்தின் தர்மேந்தர் யாதவ் போட்டியிடுகிறார். இவரது வாக்குகளை காங்கிரஸின் சலீம் ஷெர்வானி பிரிக்கிறார்.
மாயாவதிக்கு நெருக்கமான தலைவராக இருந்து வெளியேற்றப்பட்ட நசீமுதீன் சித்திக்கி, காங்கிரஸ் சார்பில் பிஜ்னோர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரால், பிஎஸ்பியின் மலூக் நாகர் வாக்குகள் பிரியும் நிலை உள்ளது. மீதமுள்ள மூன்றில் பிஎஸ்பி இரண்டிலும், எஸ்பி ஒன்றிலும் போட்டியிடுகிறது. இங்கு காங்கிரஸின் முஸ்லிம் வேட்பாளர்களை எதிர்க்க பொருத்தமானவர்களை இரண்டு கட்சிகளும் தேடி வருகின்றன.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் உ.பி. காங்கிரஸார் கூறும்போது, ‘‘உ.பி.யின் பெரும்பாலான தொகுதிகளில் இதுபோல் எதிர்க் கட்சி வாக்குகள் பிரிவதால் பாஜக பெறும் பலன் அனைவரும் அறிந்ததே. இதனால், கைகோர்க்க விரும்பிய காங்கிரஸ், மெகா கூட் டணியால் புறக்கணிக்கப்பட்டது. இதையும் மீறி எங்கள் வேட்பாளர்களால் மெகா கூட்டணிக்கே அதிக பலன் கிடைக்கும்’’ எனத் தெரிவித்தனர்.
உ.பி.யில் முஸ்லிம்கள் சுமார் 20 சதவிகிதம் பேர் உள்ளனர். இவர்களுடைய வாக்குகளால் வெற்றி, தோல்வி ஏற்படும் சட்டப்பேரவை தொகுதிகள் சுமார் 80 இருக்கின்றன. எனினும் உ.பி.யில் வெறும் 14 முஸ்லிம் எம்எல்ஏ.க்கள் மட்டுமே உள்ளனர்.
முஸ்லிம் வாக்குகள் பிரிந்ததால் பாஜக வென்றது. அந்தக் காரணத்தால் முஸ்லிம் களுக்கு பாஜக வாய்ப்பளிக்கவில்லை. அத னால் அக்கட்சிக்கு உ.பி.யில் எம்எல்ஏ, எம்பி ஒருவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.