

ராணுவத்தை தங்களது பிரச்சார ஆயுதமாக பாஜக பயன்படுத்தி வருவதாக கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சித் தலைவரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
உ.பி.முதல்வர் யோகி ஆதித்ய நாத் இந்திய ராணுவத்தை ‘மோடியின் சேனை’ என்று வர்ணித்தது பெரும் சர்ச்சையாகி தேர்தல் ஆணையம் யோகிக்கு ‘ஜாக்கிரதையாகப் பேசவும்’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தேஜஸ்வி யாதவ் அளித்த பேட்டியில் பாலகோட் தாக்குதல் பற்றியும் அது குறித்த பாஜகவின் பிரச்சாரம் பற்றியும் கேள்வி எழுப்பிய போது,
“மோடி பிரதமராவதற்கு முன்பு நம் நாட்டு ராணுவம் என்ன பயனற்று கிடந்ததா, இவர் வந்த பிறகுதான் ராணுவம் திறமையாகச் செயல்படுகிறதா? இவர் நாற்காலியில் உட்காராத போது ராணுவம் என்ன கையாலாகாமல் இருந்ததா?
பாலகோட் தாக்குதல் இந்திய ராணுவத்தின் சாதனை. ராணுவத்தை அரசியலாக்கலாமா? மோடியால்தான் இவையெல்லாம் சாத்தியம் என்று பிரச்சாரிக்கின்றனர், இது எவ்வளவு பெரிய பிரச்சாரம்?
எதிர்க்கட்சிகளை பாகிஸ்தானின் முகவர்கள் என்று சாடுகிறார் மோடி, ஆனால் நாங்களொன்றும் சால்வை எடுத்துக் கொண்டு பாகிஸ்தான் செல்லவில்லை, அங்கு அழையா விருந்தாளியாகச் சென்று பிரியாணி சாப்பிடவில்லை. வெட்கக்கேடான தாக்குதலுக்குப் பிறை ஐஎஸ்ஐ-யை பதான்கோட் விமானப்படை தளத்துக்கு அழைக்கவில்லை” என்றார் தேஜஸ்வி யாதவ்.