

துலாபார தானத்தின்போது தராசு சங்கிலி விழுந்து காயம்பட்ட சசிதரூரைச் சந்தித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நலம் விசாரித்தார். இதை நெகிழ்ச்சியுடன் சசிதரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் எலியும் பூனையுமாக வலம் வரும். அதன் தலைவர்கள் உச்சகட்டமாக முட்டி மோதுவார்கள். ஆனால் தனிநபர் பண்பாடு என்று வரும்போது அதை மதித்து நடப்பது வடமாநில அரசியலில் அடிக்கடி காணும் நிகழ்வு. மீண்டும் அது நிகழ்ந்துள்ளது.
திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் சசிதரூர். இவர் நேற்று தம்பனூரில் உள்ள காந்தாரி அம்மன் கோயிலுக்குச் சென்று தனது எடைக்கு எடையாக துலாபாரத்தில் வாழைப்பழங்களை வழங்கினார்.
அப்போது, தராசின் ஒருபுறத்தின் தட்டிலில் சசிதரூர் அமர்ந்திருந்த நிலையில் எதிர்பாராத வகையில் திடீரென தராசின் இரும்புச் சங்கிலி அறுந்து விழுந்தது.
இதனால் தராசில் அமர்ந்திருந்த சசிதரூர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். சசிதரூரின் கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவர் அணிந்திருந்த ஆடை முழுவதும் ரத்தமானது.
இதையடுத்து உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சசிதரூர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து, தலையில் 6 தையல்கள் போட்டனர். தற்போது சசிதரூர் நலமாக உள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் சசிதரூரை பாஜக தலைவரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன் மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். அவர் விரைவில் உடல் நலம் பெற வாழ்த்து தெரிவித்தார். நிர்மலா சீதாராமன் வரவை சசிதரூர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இதுகுறித்து நெகிழ்ந்து போய் தனது ட்விட்டரில் சசிதரூர் வெளியிட்ட பதிவில், ''தேர்தல் பிரச்சாரத்துக்காக திருவனந்தபுரம் வந்த நிர்மலா சீதாராமன் என்னைச் சந்தித்து நலம் விசாரித்தார். இதுபோன்ற பண்பு இந்திய அரசியலில் அரிதான ஒன்று. அதற்கு நிர்மலா சீதாராமன் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.
வட மாநிலங்களில் இதுபோன்ற பக்குவம் அரசியலில் உண்டு. தமிழ்நாட்டில்தான் இது அரிதாக உள்ளது.