

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த மிக மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அமர்வில் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் அடுத்த நிலையில் இருக்கும் நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் உள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் , கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாகக் கூறி இரண்டு சம்பவங்களைக் குறிப்பிட்டு நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் அத்துமீறல் புகார்களை தெரிவித்துள்ளார். இந்தப் புகார்களை உச்ச நீதிமன்றத்தில் உள்ள 22 நீதிபதிகளுக்கும், அந்தப் பெண் பிரமாணப் பத்திரமாக அனுப்பினார்.
இதைத்தொடர்ந்து அந்தப் புகார் சனிக்கிழமை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. ஆனால், நீதிபதிகள் உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை.
ஆனால், சம்பந்தப்பட்ட பெண் முறைகேடு புகார் ஒன்றில் சிக்கியதையடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டவர். அதுதொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உட்சவ் சிங் ஜெயின்ஸ் என்பவர் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை சிக்கவைக்கவும், அவரை பதவி விலக வைக்கவும் சதி நடக்கிறது. என்னிடம் அஜெய் என்பவர் சமீபத்தில் அணுகி, தலைமை நீதிபதிக்கு எதிராக போலியாக பாலியல் புகாரைப் பதிவு செய்ய உதவ வேண்டும், பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார். அதற்காக என்னிடம் ரூ.1.50 கோடி பேரம் பேசப்பட்டது. ஆனால், அதற்கு நான் மறுத்துவிட்டேன் என்று தெரிவித்திருந்தார். அந்த மனு குறித்து இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.
இதற்கிடையே உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகாரை யார் விசாரிப்பது என்பது குறித்த சிக்கல் எழுந்தது. இது தொடர்பாக கடந்த இரு நாட்களாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கூடி ஆலோசனை நடத்தினர். தலைமை நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் இந்தப் புகாரை எவ்வாறு எதிர்கொள்வது, நீதிமன்றத்தின் மாண்புக்கும், நீதிமன்றத்தை ஒழுங்குபடுத்தவும் எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என ஆலோசிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரையின் அடிப்படையில் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மிக மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த அமர்வில் மூத்த நீதிபதி ஏ.எல்.ரமணா, பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இது குறித்து நீதிபதி பாப்டே பிடிஐ நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், "தலைமை நீதிபதி மீது தரப்பட்டுள்ள பாலியல் புகார் குறித்து விசாரிக்க அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. என் தலைமையில் நீதிபதி என்.வி.ரமணா, பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி இடம் பெற்றுள்ளனர். இந்தப் புகாரை அளித்த பெண்ணுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுவிட்டது. இந்தப் புகாரின் முதல் விசாரணை வரும் வெள்ளிக்கிழமை நடக்கும். நீதிமன்றத்தின் செயலாளர் அனைத்து ஆவணங்களையும், ஆதாரங்களையும் தயாராக வைக்க உத்தரவிட்டுள்ளோம். இது நீதிமன்ற விதிகளைப்பற்றித்தான் போல்தான் நடந்தாலும் முறைப்படியான நீதிமன்ற விசாரணை அல்ல. இந்த விசாரணையை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற வரையறை இல்லை, விசாரணையில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்டத்துக்குச் செல்வோம், அனைத்தும் ரகசியம் காக்கப்படும்" எனத் தெரிவித்தார்.