Published : 21 Apr 2019 07:25 PM
Last Updated : 21 Apr 2019 07:25 PM

குறுகிய சிந்தனையிலிருந்து நாட்டைக் காப்பாற்றுங்கள் : வயநாட்டில் பிரியங்கா பேச்சு

தற்போது நடந்துகொண்டிருக்கும் மக்களவைத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; ஜனநாயகத்தை கீழறுக்கும், எதிர்ப்புகளை அடக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குறுகிய சிந்தனையிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கான தேர்தல் என்பதால் அதைக் கருத்தில்கொண்டு வாக்களியுங்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று கேரளா வந்திருந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது சகோதரரும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

ராகுல் போட்டியிடும் வயநாடு மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரியங்கா கலந்துகொண்டு பேசியதாவது:

''ஆட்சி அதிகாரத்திற்காக காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடவில்லை.

நாட்டின் மிகப்பெரிய கருத்தியலான ஜனநாயக சக்திகளின் பலத்தை பெருக்குவதற்காக போட்டியிடுகிறது. நாம் எல்லோரும் ஒருவரையொருர் நேசிக்கவும், ஒருவரையொருவர் நம்பவும் இந்த நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே இத் தேர்தல் நடைபெறுகிறது.

நாம் அனைவரும் சமம், கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம், நமது மதம், நாம் உணவுமுறைகள், நம் வாழ்க்கைப் பாதைகள் எல்லாவற்றிற்கும் இந்த நாட்டில் இடம் உண்டு.

மிகப்பெரிய காரணத்திற்காக இந்த மாநில மக்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும். நாங்கள் ஒரு பெரிய காரியத்திற்காக போராடுகிறோம் என நாங்கள் எங்கள் கூட்டணியில் வாக்களிக்கும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன். வெறும் ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்காக நாம் போராடவில்லை. இந்தத் தேர்தலில் நாங்கள் மிகப்பெரிய காரணத்திற்காக போராடுகிறோம்.

சமீபகாலமாக சுதந்திரமாக பேசுதவற்கான உரிமையைக்கூட மக்கள் திடீரென இழந்துள்ளனர். திடீரென மக்கள் பயப்படத் தொடங்கியுள்ளனர். மக்கள் உரிமையைப் பாதுகாக்கும் அமைப்புகள் செயலிழந்துள்ளன. ஜனநாயகம் தன் மதிப்பை கொஞ்சம்கொஞ்சமாக இழந்துள்ளது. எனவே இது சாதாரண தேர்தல் அல்ல என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட தலைவரின் பெயரைச் சொல்லி விமர்சிப்பதற்குக் கூட பயமாக இருக்கிறது. ஆளும் இந்த அரசாங்கத்திடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதை மட்டும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

குறுகிய சிந்தனை கருத்தியலை நம்மீது திணிக்கும் ஆட்சி அதிகாரத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும். அதுஒன்றுதான் நம்முன் உள்ள ஒரே வெற்றிப்பாதை.

விமர்சனத்தைக் கண்டு பயப்படும் இந்த அரசாங்கத்திடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும். ஏனெனில் நீங்கள் குரலை உயர்த்தும்போதெல்லாம் இந்த அரசாங்கம் உங்களை ஒடுக்க நினைக்கிறது. எனவே நீங்கள் வாக்களிக்கும் போது இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.''

இவ்வாறு பிரியங்கா காந்தி தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

கூட்டம் முடிந்தபிறகு அவர் முக்கியமான இரு குடும்பத்தினரை சந்திக்க சென்றார்.

உயிரிழந்த ஜவான் குடும்பத்தினருக்கு ஆறுதல்

புல்வாமா தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த சிஆர்பிஎப் ஜவான் வி.வி.வசந்தகுமார் குடும்பத்தினரை இன்று அவர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

வசந்தகுமார் குடும்பத்தினரிடைய அவர்களுக்கு ஆறுதல் அளிக்க அரைமணிநேரம் செலவிட்டார்.

பழங்குடிப்பெண் ஸ்ரீதன்யா ஐஏஎஸ்ஸுக்கு வாழ்த்து

அதன் பின்னர் ஐஏஎஸ்ஸில் வெற்றிபெற்ற முதல் பழங்குடியினப் பெண்ணான ஸ்ரீதன்யா சுரேஷை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஸ்ரீதன்யாவிடம் பேசும்போது புன்னகையோடு காணப்பட்டார். அவருடன் பேசிமுடிந்தபிறகு அவரை இதமாக அணைத்து விடைபெற்றார்.

அதன் பிறகு ஊடகத்தினரிடையே அவர் கலந்துரையாடினார்.

பிரியங்கா பங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கு நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள் திரண்டனர். வயநாடு மக்களவைத் தொகுதியில் நான்கு இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரியங்கா இன்று கலந்துகொண்டார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x