

கர்நாடகாவில் காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதா தளமும் ஊழலையும் வாரிசு அரசியலையும் வளர்ப்பதில் கூட்டு சேர்ந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இரு கட்சிகள்மீதும் தாக்குதல் தொடுத்தார்.
கர்நாடக மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அங்கு சிக்கோடி என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
காங்கிரஸூம், மதசார்பற்ற ஜனதா தளமும் ஒவ்வொரு பிரச்சினையிலும் வேறுபடுகின்றன. ஆனால் வாரிசு அரசியலை வளர்ப்பதிலும் ஊழல் செய்வதிலும் இரண்டும்
ஒன்றாக சேர்ந்துகொள்கின்றன. அதுமட்டுமின்றி தேசியவாதம் மற்றும் என்னைப்பற்றியும் தவறாகப் பேசுவதிலும் அவர்கள் ஒன்றுசேர்ந்துகொள்கின்றனர்.
கர்நாடக முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி ராணுவத்தைப் பற்றி பேசும்போது மிகவும் தவறாக பேசியுள்ளார். அதாவது இரண்டு வேளை சாப்பாட்டுக்கு மட்டுமே ராணுவத்தில் சேரவேண்டும் என்று யாரும் நினைக்கக்கூடாது என்கிறார். என்ன சொல்ல வருகிறார். இரண்டு வேளை சாப்பாட்டுக்காகத்தான் ராணுவத்தில் சேருகிறார்களா? இப்படி பேசும் அவர்கள் (தேவகவுடாவின்) குடும்பம் பொதுவாழ்க்கையிலிருந்தே தூக்கியெறியப்பட வேண்டும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
கர்நாடகா மாநிலத்தில் 14 மக்களவைத் தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட தேர்தலில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.