

மக்களவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 91 தொகுதி களுக்கு பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் 11-ம் தேதி (இன்று) தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
மக்களவைத் தேர்தலில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. ஆந்திரா 25, அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பிஹார் 4, சத் தீஸ்கர் 1, ஜம்மு காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகாலயா 2, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 4, சிக்கிம் 1, தெலங்கானா 17, திரிபுரா 1, உத்தர பிரதேசம் 8, உத்தராகண்ட் 5, மேற்கு வங்கம் 2, அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1, லட்சத்தீவுகள் 1 என மொத்தம் 91 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை எதிர்கொள்கின்றன.
மொத்தம் 18 மாநிலங்களில், 2 யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில் நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்றுமுன்தினம் மாலையுடன் நிறை வடைந்தது. 91 தொகுதிகளில் சுமார் 1,300 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கடைசி நாட்களில் பல்வேறு கட்சி களின் தேசியத் தலைவர்கள் இந்தத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் ஓட்டு வேட்டையாடினர்.
சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் 4 மாநிலங்களில் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகியவை இன்று ஒரே கட்ட தேர்தலை சந்திக்கின்றன. இங்கு
மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஒடிசாவில் உள்ள 147 தொகுதிகளில் 28 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஒடிசாவில் உள்ள எஞ்சிய தொகுதிகளுக்கு ஏப்ரல் 18, 23, 29 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
பலத்த பாதுகாப்பு
இதையடுத்து ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒடிசாவில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
91 தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற வுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
வாக்குப்பதிவையொட்டி வாக்குச் சாவடிகளுக்கு தேர்தலை நடத்தும் அதி காரிகள், ஊழியர்கள் நேற்று மாலையே சென்று சேர்ந்துள்ளனர். அந்தந்த வாக்குச்
சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மலைப் பகுதிகள், வனப்பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு முன்னதாகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
பதற்றமான வாக்குச்சாவடிகள், அதிக பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடு தல் போலீஸாரும், துணை ராணுவத் தினரும் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டுள்ளனர். மேலும் அனைத்து வாக்குச் சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு வீடியோவில் பதிவு செய்யப்பட உள்ளது.
தடை உத்தரவு
வாக்கு பதிவு நடைபெற உள்ள இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குச்சாவடிகளைச் சுற்றி போலீஸார் வாகனங்களில் ரோந்து சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.