

சிலருக்கு பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம் முழக்கங்களில்தான் பிரச்சினை இருக்கிறது. அத்தகைய நபர்கள் தேர்தலில் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டாமா? என பிஹாரின் பெகுசராய் தொகுதியில் இருந்து போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் கண்ணய்ய குமார் பற்றி மறைமுகமாக விமர்சித்தார் பிரதமர் மோடி.
பிஹாரில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இவ்வாறு பேசியிருக்கிறார்.
மோடி பேசியதாவது:
தேசத்தின் பாதுகாப்பு என்பது எங்களுக்கு மிகவும் முக்கியம். தீவிரவாதம் எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுமானால் பிரச்சினையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், புதிய இந்தியாவில் இது மிகப் பெரிய பிரச்சினை. நமது அண்டைநாடுகளில் பயங்கரவாத முகாம்கள் செயல்படுகின்றன. அத்தகைய கூடாரங்களை அழிப்போம்.
இலங்கையில் 350 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது தீவிரவாதம் இல்லையா? தீவிரவாதத்தை ஒழிப்பதும் தேசியவாதத்தை முன்னெடுப்பதும் எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுமானால் முக்கியமல்லாததாக இருக்கலாம்.
ஆனால், நமக்கு அப்படியல்ல. தீவிரவாதத்தை வேரறுப்பதே நமது இலக்கு. நமது எல்லைகளை ஒட்டி உருவாக்கப்படும் தீவிரவாத முகாம்களை அழிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 3 கட்டங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் நாம் நடத்திய வான்வழித் தாக்குதல் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டனர். இப்போது அவர்களின் இலக்கு மோடியும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுமே. இவர்கள் நாட்டு மக்களின் எண்ண ஓட்டங்களில் இருந்து விலகி நிற்கிறார்கள்.
சிலருக்கு பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம் முழக்கங்களில் பிரச்சினை இருக்கிறது. அத்தகைய நபர்கள் தேர்தலில் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டாமா?
இவ்வாறு மோடி பேசினார்.