Published : 24 Apr 2019 09:02 PM
Last Updated : 24 Apr 2019 09:02 PM

பாலியல் விவகாரம்:  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்க்கு எதிராக ‘மிகப்பெரிய சதியா?’- தீவிர விசாரணைக்கு ஆயத்தமாகும் உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்க்கு எதிராக முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் தொடுத்த பாலியல் புகார்,  தலைமை நீதிபதிக்கு எதிராக விரிக்கப்பட்ட ’மிகப்பெரிய சதி’ யின் ஓர் அங்கமா? என்பதை தீவிர விசாரணைக்குட்படுத்த உச்ச நீதிமன்றம் உறுதியளித்துள்ளது.

 

இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி அருண் மிஸ்ரா நெரிசலான இன்றைய கோர்ட் அறையில் மிக உரத்தக் குரலில் கூறும்போது, “விவகாரத்தின் வேரடி வரை சென்று உண்மையைக் கண்டுபிடிக்க நாங்கள் விசாரிப்போம், விசாரிப்போம் விசாரித்துக் கொண்டேயிருப்போம்” என்று சூளுரைத்தார்.

 

அதாவது இது தொடர்பாக ’அதிருப்தி ஊழியர்கள், கார்ப்பரேட் நபர்கள், சதி செய்து முன் நிர்ணயம் செய்பவர்கள்’ ரஞ்சன் கோகய்க்கு எதிராக பெரிய சதிவலை விரித்துள்ளனரா என்பதை நீதிமன்றம் மிகத்தீவிரமாக ஆராய்ந்து உண்மையைக் கண்டுபிடிக்கும் வரை ஓயாது விசாரணை நடத்தும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

 

இளம் வழக்கறிஞர் உத்சவ் பெய்ன்ஸ் என்பவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பொய்யான புகாரை எழுப்புவதற்காக தனக்கு ரூ.1.50 கோடி தர முயற்சித்ததாக பகீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளதோடு இன்று கோர்ட்டில் அவர் தலைமை நீதிபதிக்கும் நீதித்துறைக்கும் அவமரியாதையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே மிகப்பெரிய லாபி ஒன்று வேலை செய்து வருவதாகத் தெரிவித்தார், இவர் உட்பட பலரும் தங்கள் மனுக்களை சீல்வைக்கப்பட்ட உறையில் தாக்கல் செய்துள்ளனர்.

 

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிக்க 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

 

ஆனாலும் தலைமை நீதிபதி மற்றும் நீதித்துறையின் மாண்பைக் கெடுக்கும் நோக்கத்துடன் மிகப்பெரிய சதிவலை விரிக்கப்பட்டுள்ளதான வழக்கறிஞர் பெய்ன்ஸின் குற்றச்சாட்டு எந்த விதத்திலும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீதான பாலியல் புகார் விசாரணைகளை பின்னுகுத்தள்ளாது என்று நீதிபதி அருண் மிஸ்ரா தலைமை அமர்வு உறுதியளித்தது.  இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் எழுப்பிய சந்தேகத்துக்கு கோர்ட் பதிலளிக்கையில், வழக்கறிஞர் பெய்ன்ஸ் அளித்த புகார் விசாரணை நடைமுறைகள்  பெண் பாலியல் புகார் விவகாரம் விசாரணைகளுக்கு குறுக்கே வராது.

 

 

“இரண்டு விசாரணைகளும் பரஸ்பர முன் அனுமானங்களின்படி நடக்காது, நீதிபதிகள் கமிட்டியும் ‘மிகப்பெரிய சதி’ குற்றச்சாட்டை விசாரிக்க அதிகாரம் இல்லாதது” என்று மிஸ்ரா உறுதியளித்தார்.

 

இது தொடர்பாக அமர்வின் இன்னொரு நீதிபதி ரோஹின்டன் நாரிமன், “ஏப்ரல் 20ம் தேதி சனிக்கிழமை நடந்தது பற்றி நாங்கள் விசாரிக்கவில்லை. நாங்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக அமைக்கப்பட்டுள்ளோம். பெய்ன்ஸின் பிரமாணப்பத்திரத்தை பற்றித்தான் விசாரிக்கிறோம். எனவே திரும்பத் திரும்ப எங்களை மூலையில் தள்ளாதீர்கள்” என்று இந்திரா ஜெய்சிங்கிற்கு தெரிவித்தார்.

 

நீதிபதி மிஸ்ரா தெரிவிக்கும் போது, வழக்கறிஞர் பெய்ன்ஸ் தன் பிரமாணப் பத்திரத்தில் கூறியிருப்பது பற்றி எடுத்துரைக்கும் போது, “அதிருப்தி ஊழியர்கள் ஒரு குழுவாக சேர்ந்துள்ளனர். ஒரு விஷயத்தை இவ்வாறு ‘ஃபிக்ஸ்’ செய்வது கவலையளிக்கிறது. நீதித்துறை செயல் அமைப்பில் இதற்கு இடமில்லை. இந்த ஃபிக்சர்கள் யார் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். நீதி அமைப்பில் அவர்களுக்கு இடமில்லை. நீதித்துறையின் மாண்பைக் கெடுக்க நாம் அனுமதிக்கக் கூடாது. ஆகவே உண்மையை வந்தடையும் வரை நாங்கல் விசாரிப்போம், விசாரிப்போம், வேரடி வரை சென்று விசாரிப்போம்” என்றார்.

 

சிபிஐ, டெல்லி போலீஸ், ஐபி தலைமைகளுடன் சந்திப்பு:

 

சிபிஐ இயக்குநர், டெல்லி போலீஸ் கமிஷனர், ஐபி தலைமை ஆகியோர் நீதிபதிகளை அவர்களது அறையில் சென்று ரகசியமாகச் சந்திக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  ஏன் இவர்களைச் சந்திக்கச் சொன்னோம் என்று நீதிபதி மிஸ்ரா கூறும்போது, “இது சும்மா விசாரணையில்லை. இது உண்மையில் பெரிய விசாரணை, நாங்கள் எதையும் வெளிப்படுத்தப் போவதில்லை. இது முழுதும் ரகசியமாக வைக்கப்படும். ஆதாரங்களை அழிக்க அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

 

மேலும் ‘பெரிய சதிவலை’ புகார் கூறிய வழக்கறிஞர் பெய்ன்ஸுக்கு முழு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மிஸ்ரா தெரிவித்தார், ஏனெனில் அவர் மிரட்டப்படக்கூடாது.

 

மேலும் பெய்ன்ஸ் பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளவை உண்மையாக இருந்தால் அது மிக மிக வேதனையளிக்கக் கூடியதாகும், என்றார் நீதிபதி அருண் மிஸ்ரா.

 

தலைமை நீதிபதியின் செயல்பாடுகளை விவரித்த நீதிபதி அருண் மிஸ்ரா, தலைமை நீதிபதி கோகய் நீதிமன்றத்தை சுதந்திர உணர்வுடன் நடத்தினார். அவரது சமரசமற்ற தன்மை சிலருக்குப் பிடிக்கவில்லை. எரிக்சன், அனில் அம்பானி தொடர்பான உயர்மட்ட அவமதிப்பு வழக்கில் 2 கோர்ட் ஊழியர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவையே மாற்றியமைத்து மோசடி செய்தனர் இவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர் என்ற சம்பவத்தை சுட்டிக்காட்டிய நீதிபதி அருண் மிஸ்ரா, “தலைமை நீதிபதி கோகய் நடைமுறைகளை ஒழுங்குபடுத்தினார், சிஸ்டத்தை தூய்மைப்படுத்தினார், எந்த ஒரு தலைமை நீதிபதியும் இவ்வாறான நடவடிக்கைகளை தைரியமாக எடுத்ததில்லை. ரஞ்சன் கோகய்க்குத்தான் அந்தத் தைரியம் உள்ளது. ஆனால் இந்த தலைமை நீதிபதி தொடர்ந்து இத்தகைய அழுக்குகளை அகற்றியபடியே இருந்தார்” என்றிஉ நீதிபதி அருண் மிஸ்ரா தெரிவித்தார்.

 

 

இரண்டாம் பிரமாணப் பத்திரம்:

 

தலைமை நீதிபதிக்கு எதிராக அதிருப்தியாளர்கள், புறச் செல்வாக்குச் சக்திகள் விரித்த சதிவலை குறித்த கூடுதல் ஆதாரங்களுடனான, கைப்பட எழுதிய 2வது பிரமாணப் பத்திரத்தை உணவு இடைவேளைக்குப் பிறகான அமர்வில் இன்று சமர்ப்பித்தார். நாளை (25ம் தேதி) காலை 10.30 மணி வரை பெய்ன்ஸ் ஒட்டுமொத்த, முழு பிரமாணப்பத்திரத்தையும் தாக்கல் செய்ய அவகாசம் அளித்துள்ளது.

 

தலைமை சொலிசிட்டர் துஷார் மேத்தா, “பெய்ன்ஸ் பிரமாணப்பத்திரததின் உள்ளடக்கங்களை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று  தெரிவித்தார்.

 

பெய்ன்ஸ் தன் மனுவில் தலைமை நீதிபதிக்கு எதிரான மிகப்பெரிய சதிவலையின் பின்னணியில் ’குறிப்பிட்ட தகவல்’ ஒன்று தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதாவது இந்தச் சதித்திட்டம் எப்படி திட்டமிடப்பட்டது என்பது பற்றிய விவரம் அது என்கிறார். மேலும் இதில் சிபிஐ-யை ஈடுபடுத்த பெய்ன்ஸ் ஆட்சேபணையையும் தெரிவித்துள்ளார்.

 

“சிபிஐ ஒரு அரசியல் உபகரணம், நான் கேட்பது நீதி விசாரணை. கோர்ட்டின் ஒரு அதிகாரியாக நான் அனைத்து ஆதாரங்களையும் கொண்டு வந்துள்ளேன். எனக்கு இதில் வேறு எந்த நலனும் இல்லை. நான் ஒரு அதிகாரியாகவே இந்த கோர்ட்டுக்கு வந்திருக்கிறேன்” என்று பெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x