

மிகப்பெரிய தொகை அளவில் பில்களுக்கு பணம் செலுத்தப்படாததால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு பெட்ரோல் வழங்குவதை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் விமானங்களுக்கு வழங்கப்பட்டு வந்த பெட்ரோல் டெல்லி விமான நிலையத்தில் காத்திருந்த விமானங்களுக்கு வழங்காமல் நேற்று ஒரு மணிநேரம் நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து அதன் அறிக்கை இன்று வெளியானது. இதுகுறித்து அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது:
''குறைந்த கட்டண விமானங்களுடன் ஏற்பட்டுள்ள போட்டியினாலும் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தாலும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேலான அளவில் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
விமான குத்தகைதாரர்களுக்கும் விமான விநியோகஸ்தர்களுக்கும் இன்னொரு பக்கம் விமானிகளுக்கு சம்பள நிலுவைத் தொகை போன்ற நிறைய பாக்கி வைத்துள்ளது.
நேற்று முன்தினம் தேதி மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்துச் செயலாளர் பிரதீப் சிங் கரோலா, 'ஜெட் ஏர்வேஸ் ஒரு கடனாளி' என்று கூறினார். தற்போது அதன் விமானங்கள் 15க்கும் குறைவாகவே இயங்குகின்றன. தற்போது அவ்விமானங்கள் சர்வதேச வழிகளில் இயங்க வேண்டுமெனில் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் எங்களுக்குப் பணம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் ஜெட் ஏர்வேஸுக்கு மேலும் தொடர்ந்து பெட்ரோல் வழங்க இயலாது''.
இவ்வாறு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல், 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று தற்போது இந்நிறுவனம் நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. கடந்த மார்ச் 23 அன்று அவர் கடனளித்தோருக்கு பிணைத் தொகை வழங்கும் வகையில் சற்றே இறங்கி வந்துள்ளதாகவும் கூறப்பப்படுகிறது.