Last Updated : 19 Apr, 2019 10:56 AM

 

Published : 19 Apr 2019 10:56 AM
Last Updated : 19 Apr 2019 10:56 AM

சமாஜ்வாதியில் போட்டியிடும் மனைவிக்காக பிரச்சாரம் செய்த காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா

சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடும் தன் மனைவி பூனம் சின்ஹாவிற்காக காங்கிரஸ் வேட்பாளரான கணவர் சத்ருகன் சின்ஹா பிரச்சாரம் செய்தார். நேற்று உபியின் லக்னோவில் நடைபெற்ற சம்பவம் அம்மாநில அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிஹாரின் பாட்னா சாஹேபில் பாஜகவிற்காக போட்டியிட்டு இரண்டாம் முறை எம்பியான பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா. மத்திய அமைச்சர் பதவி மீண்டும் கிடைக்காததால் கட்சியில் இருந்தபடி பாஜகவை விமர்சித்து வந்தார்.

தற்போது மக்களவை தேர்தல் சமயத்தில் பாஜகவை விட்டு வெளியேறியவர் காங்கிரஸில் இணைந்து விட்டார். அதேசமயம், தன் மனைவியான பூனம் சின்ஹாவை சமாஜ்வாதியில் சேர்த்து விட்டார்.

பாட்னா சாஹேபில் சத்ருகன் மீண்டும் போட்டியிட, அவரது மனைவி பூனமிற்கு உபியின் லக்னோவில் வாய்ப்பு கிடைத்துள்ளது. மத்திய அமைச்சர்களான ரவிசங்கர் பிரசாத்தை சத்ருகனும், ராஜ்நாத்சிங்கை பூனமும் எதிர்கொள்கின்றனர்.

உ.பி.யின் 80 தொகுதிகளில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதியின் அகிலேஷ்சிங் யாதவ் மற்றும் ராஷ்டிரிய லோக் தளத்தின் அஜித்சிங் ஆகியோர் மெகா கூட்டணி அமைத்துள்ளனர். இதில் சேர்க்கப்படாத காங்கிரஸ் அவர்களை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

இந்நிலையில், நேற்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவின் மனைவியான டிம்பிள் யாதவுடன் லக்னோவில் மனுதாக்கல் செய்யச் பூனம் சின்ஹா சென்றார். அவர்களுடன் சமாஜ்வாதியின் உபி தலைவர்களும் உடன் இருந்தனர்.

இவர்களுடன் தன் மனைவி பூனமிற்காக கணவர் சத்ருகனும் உடனிருந்து பிரச்சாரம் செய்துள்ளார். தன் மனைவியாக இருப்பினும் சமாஜ்வாதி வேட்பாளருக்கு காங்கிரஸின் சத்ருகன் செய்த பிரச்சாரம் உபியில் சர்ச்சையாகி உள்ளது.

இதுகுறித்து லக்னோவில் காங்கிரஸுக்காக போட்டியிடும் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணாம் கூறும்போது, ‘காங்கிரஸில் இருக்கும் சத்ருகன் கட்சி தர்மத்தை காக்காமல் தன் மனைவிக்காக சமாஜ்வாதி கட்சிக்கு பிரச்சாரம் செய்தது சரியல்ல. இதை அவரிடம் கேட்டால் தன் மனைவி தர்மத்தை காப்பதாகப் பதிலளிக்கிறார். இதற்கு பதிடியாக நான் பிஹாரில் சத்ருகனுக்கு பிரச்சாரம் செய்வேன்.’ எனத் தெரிவித்தார்.

இதுபோல், தம் குடும்பத்தினர் மாற்றுக்கட்சியில் போட்டியிட்டாலும் பல முக்கியத் தலைவர்கள் விலகியே இருப்பது உண்டு. இதற்கு பாஜகவில் ஒரு உதாரணம் சமீபத்தில் நிகழ்ந்தது.

ஹரியானாவை சேர்ந்த மத்திய இணை அமைச்சரான சவுத்ரி விரேந்தர் சிங்கின் மகன் காங்கிரஸில் போட்டியிடுகிறார். இதனால், வீரேந்தர் தன் மத்திய அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்திருந்தார்.

சுமார் 40 வருடம் காங்கிரஸில் இருந்த வீரேந்தர் 2014-ல் பாஜகவில் இணைந்திருந்தார். இவரும் பாஜகவிற்காக ஹரியானாவின் ஹிசார் தொகுதியில் போட்டியிடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x