Last Updated : 25 Apr, 2019 05:33 PM

 

Published : 25 Apr 2019 05:33 PM
Last Updated : 25 Apr 2019 05:33 PM

தலைமை நீதிபதிக்கு எதிரான சதி விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையில் ஒருநபர் விசாரணை குழு

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்க்கு எதிரான பாலியல் புகாரில் மிகப்பெரிய சதி இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக்கை  தலைமையில் ஒருநபர் குழுவை நியமித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாகக் கூறி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் அத்துமீறல் புகார்களைத் தெரிவித்தார்.

இந்தப் புகார்களை உச்ச நீதிமன்றத்தில் உள்ள  22 நீதிபதிகளுக்கும், அந்தப் பெண் பிரமாணப் பத்திரமாக அனுப்பியதால் பூதாகரமானது.

ரூ.1.50 கோடி பேரம்

இதற்கிடையே உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உட்சவ் சிங் பெயின்ஸ் என்பவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை சிக்கவைக்கவும், அவரை பதவி விலக வைக்கவும் சதி நடக்கிறது. என்னிடம் அஜெய் என்பவர் சமீபத்தில் அணுகி, தலைமை நீதிபதிக்கு எதிராக போலியாக பாலியல் புகாரைப் பதிவு செய்ய உதவ வேண்டும், பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார். அதற்காக என்னிடம் ரூ.1.50 கோடி பேரம் பேசப்பட்டது. ஆனால், அதற்கு நான் மறுத்துவிட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

வழக்கறிஞர் பெயின்ஸ் புகாரை விசாரிக்க,  நீதிபதிகள் அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ரோஹின்டன் நாரிமன், தீபக் குப்தா ஆகிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது. 

2-வது பிரமாணப்பத்திரம்

மேலும், நேற்று 2-வது பிரமாணப்பத்திரத்தையும் வழக்கறிஞர் பெய்ன்ஸ் தாக்கல் செய்தார்.அதில் தலைமை நீதிபதிக்கு எதிராக அதிருப்தியாளர்கள், புறச் செல்வாக்குச் சக்திகள் விரித்த சதிவலை குறித்த கூடுதல் ஆதாரங்களை கைப்பட எழுதி இருந்தார். பெய்ன்ஸ் தன் மனுவில் தலைமை நீதிபதிக்கு எதிரான மிகப்பெரிய சதிவலையின் பின்னணியில் ’குறிப்பிட்ட தகவல்’ ஒன்று தன்னிடம் இருப்பதாகவும், இந்த வழக்கின் விசாரணையில் சிபிஐ அமைப்பை ஈடுபடுத்தக் கூடாது என்று என்றும் பெய்ன்ஸ் வலியுறுத்தி இருந்தார்.

சந்திப்பு

முன்னதாக, நேற்று பிற்பகலில் சிபிஐ இயக்குநர், டெல்லி போலீஸ் கமிஷனர், ஐபி தலைமை ஆகியோர் அருண் மிஸ்ரா  தலைமையிலான நீதிபதிகளை அவர்களது அறையில் சென்று ரகசியமாகச் சந்தித்து பேசினார்.

இந்நிலையில், நீதிபதிகள் அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ரோஹின்டன் நாரிமன், தீபக் குப்தா ஆகிய சிறப்பு அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் பெயின்ஸ் முழுமையான பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்தார். அப்போது நீதிபதி அருண் மிஸ்ரா காட்டமாகப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், " பணவலிமை படைத்தவர்கள் சிலர் இந்த உச்சநீதிமன்றத்தை நிர்வாகம் செய்யவும், நடத்தவும் முயல்கிறார்கள். இதுபோன்ற குற்றச்சாட்டை நாங்கள் மூன்றாவது முறையாகக் கேட்கிறோம். முன்கூட்டியே தீர்ப்பை நிர்ணயிக்கும், விலைக்கு வாங்கும் சக்திபடைத்தவர்கள், நீதிமன்றத்தை விட்டு கண்டிப்பாகச் செல்ல வேண்டும். இந்த விஷயத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக கருதுகிறோம். நீதிமன்றத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த மிகப்பெரிய நெட்வொர்க் வேலை செய்கிறது.

உச்ச நீதிமன்றத்தை ஒருபோதும் நிர்வாகம் செய்ய முடியாது, கட்டுப்படுத்த முடியாது என்பதை நாங்கள் நாட்டின் வசதிபடைத்த, அதிகாரம் படைத்தவர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். அவர்கள் நெருப்புடன் விளையாடுகிறார்கள், அதை கண்டிப்பாக நிறுத்திக்கொள்ள வேண்டும் " என்று கண்டிப்புடன் தெரிவித்த, நண்பகல் 3 மணிக்கு உத்தரவு பிறப்பிப்பதாகத் தெரிவித்தனர்.

நண்பகலில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் அமர்வு கூடியது. அப்போது நீதிபதி அருண் மிஸ்ரா பல்வேறு உத்தரவுகளைப் பிற்பித்தார்.

அதில் " தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீதான பாலியல் புகாருக்குப்பின் மிகப்பெரிய சதி இருக்கிறது என்று வழக்கறிஞர் ஜெயின்ஸ் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கி.பட்நாயக் தலைமையில் ஒருநபர் குழு அமைத்துள்ளோம்.

இந்த விசாரணையில் நீதிபதி ஏ.கே.பட்நாயக்கிற்கு தேவையான அனைத்து உதவிகளையும், சிபிஐ இயக்குநர், உளவுத்துறை இயக்குநர், டெல்லி போலீஸ் ஆணையர் ஆகியோர் உதவி செய்ய வேண்டும்.

இந்த விசாரணை ஒருபோதும் பாலியல் தொடர்பாக புகார்களை குறித்து விசாரனைக்கு தடையாக இருக்காது, அந்த விசாரணைய பாதிக்காது. இந்த விசாரணையை முடித்து ஓய்வு பெற்ற நீதிபதி பட்நாயக் தன்னுடைய அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். அதன்பின் அந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடக்கும். இந்த விசாரணைக்கு தேவையானவர்களை அவர்கள் நியமித்துக்கொள்ளலாம் " எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x