

டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் சுற்றி பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை வெள்ளை புலி அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இங்கு உலக அளவில் அழிந்து வரும் விலங்கினமான வெள்ளை புலியும் உள்ளது. இதனால் இங்கு இருக்கும் 'விஜய்' என பெயரிடப்பட்ட வெள்ளை புலியை ஆர்வமாக பார்க்க வருபவர்கள் அதிகம்.
இந்த நிலையில், வழக்கும்போல் சுற்றுலாவுக்காக வந்த ஓர் இளைஞருக்கு இந்த கொடூரம் நேர்ந்துள்ளது. இதனை நேரில் பார்த்த சக சுற்றுலா பயணி கூறும்போது, "உயிரியல் பூங்காவில் சுற்றுலாவுக்காக வந்த இளைஞர் ஒருவர், 12.30 மணி அளவில் அங்கு உள்ள அரிய வகை வெள்ளைப் புலி இருக்கும் பகுதிக்கு தனது நண்பருடன் வந்திருந்தார். தடுப்புகளுக்குள் உள்ள புலியை பார்க்கும் ஆர்வத்தில் தடுப்பை மீறி உள்ளே நுழைந்தார்.
அவர் உள்ளே விழுந்ததும், புலி அவரை நோக்கி அருகே வர பார்த்தது. இதனை கண்டு அச்சம் அடைந்த அவர், கையை கட்டி அமைதியாக நடுக்கத்துடன் சில நிமிடங்கள் இருந்தார். அவரால் வெளியே வரவும் முயற்சி செய்ய முடியவில்லை.
திடீரென புலி, அவர் மீது பாய்ந்து கழுத்தை கவ்வி, அவரை இழுத்து சென்று கடித்து குதறியது. அவருடன் வந்தவர் கம்பை நீட்டி அவரை வெளியே இழுக்க முயற்சித்தார். ஆனால் பயனில்லை" என்றார் அவர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து பல மணி நேரம் ஆன பின்னரும் இறந்தவரின் உடலை வெளியே கொண்டு வர முடியாமல் பூங்காவின் அதிகாரிகளும் போலீஸாரும் தவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் அதிர்ந்து போயினர். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக கூறிய டெல்லி தேசிய உயிரியல் பூங்காவின் மேற்பார்வையாளர் ஆர்.ஏ.கான், இறந்தவரின் பெயர் மக்சூத் (20) என்று தெரியவந்துள்ளதாக கூறினார்.
மேலும், அந்த இளைஞர் தானே சென்று தடுப்புக்குள் குதித்ததாகவும், கற்களை வீசியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறியதாகவும் பூங்கா அதிகாரிகள் கூறுகின்றனர்.