Last Updated : 27 Apr, 2019 01:21 PM

 

Published : 27 Apr 2019 01:21 PM
Last Updated : 27 Apr 2019 01:21 PM

சாதியைப் பேசுவது சாமானியர்களிடம் கொள்ளையடிப்பதும்தான் எதிர்க்கட்சிகளின் மந்திரம்: பிரதமர் மோடி சாடல்

உத்தரப் பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி, எதிர்க்கட்சிகளின் மந்திரமே சாதியைப் பற்றிப் பேசுவதும், சாமானியர்களிடம் கொள்ளையடிப்பதுதான் என்று பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை மோடி நேற்று தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து  கன்னோஜ் பகுதியில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகியவை சேர்ந்து சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளது. இந்த சந்தர்ப்பாவாதிகள் அனைவரும் சேர்ந்து எதற்கும் உதவாத அரசைத்தான் நிறுவ விரும்புகிறார்கள். இவர்களின் மந்திரம் முழுவதுமே சாதியைப் பற்றிப் பேசி, சாமானிய மக்களிடம் கொள்ளையடிப்பதுதான்.

என்னைத் திருடன் என்று கூறுகிறார்கள். ராம பக்தர்களைக் கிண்டல் செய்கிறார்கள். உண்மையில் சந்தர்ப்பவாதிகள் சேர்ந்து அமைத்துள்ள கூட்டணி மிகப்பெரிய ஊழல் கூட்டணி. இவர்களின் நோக்கமே மக்களுக்குப் பயன்தராத அரசை உருவாக்குவது தான். என்னதான் எதிர்க்கட்சிகள் முயற்சி எடுத்தாலும், எனக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தாலும் மக்கள் மீண்டும் மோடி ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர்களின் பிரதமர் கனவு என்பது முட்டாள்தனமானது. பிரதமராவதற்காக சமாஜ்வாதிக் கட்சியின் ஆதரவை மாயாவதி கேட்பது வேடிக்கையானது. எதிர்க்கட்சிகள் சேர்ந்து அமைத்துள்ள ஊழல் கூட்டணியால் தங்களின் வாரிசுகளின் நலன்கள் குறித்துதான் சிந்திக்க முடியுமே தவிர தேசத்தின் நலன் குறித்து சிந்திக்க முடியாது.

எதிர்க்கட்சிகள் அனைவரும் பாலகோட்டில் நம்முடைய விமானப்படையினர் தீவிரவாதிகள் முகாம்கள் தாக்கி அழித்த செயலுக்கு ஆதாரம் கேட்கிறார்கள். பாட்லா ஹவுஸ் பகுதியில் தீவிரவாதிகளை ராணுவத்தினர் என்கவுன்ட்டர் செய்ததற்கு கண்ணீர்  வடிக்கிறார்கள்''.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x