

ரஃபேல் வழக்கில் சீராய்வு மனு மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ் கட்சி, ரஃபேல் வழக்கில் விசாரணை உண்டு, மோடி கவலைப்படவேண்டாம் என்று கிண்டல் செய்துள்ளது.
ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து, ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் விசாரணை தேவையில்லை என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை மீதான விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கடந்த மாதம் 14-ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்ப வழங்கப்பட்டது. அதில், ரஃபேல் போர்விமானக் கொள்முதல் தொடர்பாக நாளேடுகளில் வெளியான ஆவணங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் மத்திய அரசின் ஆட்சேபனை மனுவை தள்ளுபடி செய்கிறோம். விரைவில் விசாரணை தொடங்கும் " எனத் தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா டெல்லியில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில் " பிரதமர் மோடி தன்னால் முடிந்தவரை பொய்களைப் பேசி அரசை நடத்திக் கொள்ளலாம். ஆனால், விரைவாகவோ அல்லது தாமதமாகவோ உண்மை வெளியாவது நிச்சயம். ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தின் எலும்புகள் ஒவ்வொன்றாக வெளியே வரும்.
இப்போது எந்தவிதமான ரகசிய காப்புச் சட்டத்தையும் பின்னாலும் மறைக்க முடியாது. உச்ச நீதிமன்றம் சட்டத்தின் கொள்கையை சரியான நேரத்தில் உறுதி செய்துள்ளது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் விவகாரங்களை வெளிப்படுத்திய சில பத்திரிகையாளர்கள், பத்திரிகைகளுக்கு எதிராக ரகசிய காப்புச் சட்டத்தை பயன்படுத்துவோம் என்று மோடி அரசு அச்சுறுத்தியது. நீங்கள் விரும்பினாலும் , விரும்பாவிட்டாலும், கவலைப்படாதீர்கள் மோடிஜி, ரஃபேல் வழக்கில் விசாரணை நடக்கப்போகிறது " எனத் தெரிவித்தார்.