Last Updated : 02 Apr, 2019 12:00 AM

 

Published : 02 Apr 2019 12:00 AM
Last Updated : 02 Apr 2019 12:00 AM

சசிகலா வாழ்க்கையை படமாக்குகிறார் ராம் கோபால் வர்மா: வேகமாக வளரும் ஜெயலலிதா திரைப்படம்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் ஏ.எல்.விஜய், ‘தலைவி' என்ற பெயரிலும், ஆ.பிரியதர்ஷன் ‘தி அயர்ன் லேடி'என்ற பெயரிலும் திரைப் படமாக இயக்கி வருகின்றனர்.

அதேபோல், இயக்குநர் கவுதம் மேனன், ‘குயின்' என்ற பெயரில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெப் சீரியலாக இயக்கி வருகிறார். இந்நிலையில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் ராம் கோபால் வர்மா, ‘சசிகலா' என்ற பெயரில் இயக்குவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே இவர் சந்தன கடத்தல் வீரப்பன், ரத்த சரித்திரம், சர்க்கார் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அண்மையில் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் அரசியல் மற்றும் தனிப்பட்ட‌ வாழ்வை அடிப்படையாக கொண்டு ‘லஷ்மி என்டிஆர்' திரைப்படத்தை வெளியிட்டார்.

இந்நிலையில், ராம் கோபால் வர்மா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சசிகலா' படத்தின் போஸ்டரை வெளியிட்டார். அதில், ‘‘இந்த திரைப்படம் சசிகலாவின் வாழ்க்கை, ஜெயலலிதாவுடனான உறவு, இரக்கமற்ற குணம், மன்னார்குடி கூட்டம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. காதல் என்பது ஆபத்தான அரசியல்'' என குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் வெளியாகும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராம் கோபால் வர்மாவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது, ‘‘இந்த திரைப்படத்தில் சசிகலாவின் தொடக்க கால‌ வாழ்க்கை, ஜெயலலிதாவுக்கும் அவருக்குமான நெருக்கம், திரைமறைவில் அரங்கேறிய அவரது அரசியல், ஜெயலலிதாவின் சந்தேகத்துக்குரிய மரணம், பரப்பன அக்ரஹாரா சிறை வாழ்க்கை, மன்னார்குடி குடும்பத்தாரின் வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து படமாக்க இருக்கிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த யாருக்கும் தெரியாத பல விஷயங்கள், மற்ற இயக்குநர்கள் படமாக்க தயங்கும் அதிர்ச்சிகரமான உண்மைகள் ஆகியவற்றை ராம் கோபால் வர்மா துணிச்சலோடு படமாக்க திட்டமிட்டுள்ளார்'' என்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சசிகலா பெங்களூருவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ராம் கோபால் வர்மா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை சந்திக்க முயற்சித்தார். ஆனால் சசிகலா அவரை சந்திக்க மறுத்துவிட்டார்.

சசிகலாவின் தம்பி திவாகரனின் மகனும், அண்ணா திராவிடர் கழக மாநில இளைஞரணி செய லாளருமான ஜெய் ஆனந்த் கூறும்போது, ‘‘ஒருவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும்போது சம்பந்தப் பட்டவரின் அனுமதி பெற வேண்டும். ஆனால், ராம் கோபால் வர்மா இதுவரை சசிகலாவிடம் அனுமதி பெறவில்லை. அவரது கருத்துகளையும் கேட்கவில்லை. ஜெயலலிதா, சசிகலாவுடன் சம்பந்தப்பட்டவர்களின் கருத்து களைக் கேட்காமல் திரைப்படம் எடுக்க முடியாது’’ என்றார்.

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படக் குழுவில் உள்ள எழுத்தாளர் அஜயன் பாலா கூறும்போது, ‘‘ஒரு கட்சியை பற்றியோ, குறிப்பிட்ட காலகட்ட அரசியலைப் பற்றியோ திரைப்படம் எடுப்பதற்கு யாரிடமும் அனுமதி பெற தேவை இல்லை. ஆனால் ஒரு மனிதரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க அவசியம் அனுமதி பெற வேண்டும். அந்த தலைவரிடமோ, அவரது ரத்த வாரிசு அல்லது குடும்பத்தாரிடமோ கட்டாயம் அனுமதி பெற வேண்டும்’’ என்றா்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x