

மறைந்த முன்னாள் உ.பி. முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் திவாரி தலையணையால் முகத்தில் அமுக்கி கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ள நிலையில் அவரது மனைவியிடம் போலீஸார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலைச் சேர்ந்தவர் என்.டி.திவாரி. உ.பி.யில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக மூன்று முறை இருந்தவர். கடந்த 2008-ல் ஆந்திர ஆளுநராக இருந்த திவாரி, தனது தந்தை என ரோஹித் சேகர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது பலரும் அதிர்ந்தனர்.
ஹரியாணா மாநில முன்னாள் அமைச்சரின் மகளான உஜ்வல் தங்கியிருந்த வீட்டில் திவாரி புதிய எம்பியாக குடியேறினார். அப்போது அரசு வீட்டை காலி செய்யாமல் இருந்த உஜ்வலுக்கும் திவாரிக்கும் இடையே காதல் வளர்ந்ததாக கூறபப்பட்டது. அதன் விளைவாக ரோஹித் பிறந்ததாகவும் பின்னர் தெரிய வந்தது. இதை திவாரி மறுத்து வந்தபோதும், மரபணு சோதனையில் உறுதி செய்யப்பட்டது. என்.டி திவாரி 2018-ம் ஆண்டு உயிரிழந்தார்.
இந்தநிலையில் தனது தந்தை என்.டி திவாரி என போராடி நிரூபித்த மகன் ரோஹித் சேகர் திடீரென மரணமடைந்தார். அவரது உடலில் சில காயங்கள் இருந்ததால் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டது. அதில், ரோஹித் திவாரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இயற்கை மரணம் அல்ல என்று கூறப்பட்டது. தலையணையால் முகத்தில் வைத்து அமுக்கியதால், மூச்சு திணறி அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து இது கொலையாக இருக்கலாம் என்ற கோணம் எழுந்துள்ளது. வழக்கும் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டது.
அப்போது வீட்டில் ரோஹித் மனைவி அபூர்வா, அவரது உறவினர் சித்தார்த், வீட்டுப் பணியாளர்கள் வீட்டில்தான் இருந்துள்ளனர். இதையடுத்து அபூர்வாவிடம் டெல்லி போலீஸார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.