Published : 08 Apr 2019 06:42 AM
Last Updated : 08 Apr 2019 06:42 AM

தேர்தலுக்கு தேர்தல் அப்பாவி மக்களை ஏமாற்றும் முன்னாடி... பின்னாடி... அரசியல் விளையாட்டு- முடிவு கட்ட வேண்டிய நேரம் இது

இப்போதைய கேள்வி : தேர்தலுக்குப் பிறகு ஏற்படும் கூட்டணியை அனுமதிக்கலாமா? அது வாக்காளர்களுக்கு இழைக்கப்படும் நம்பிக்கை துரோகம் ஆகாதா? ஒவ்வொரு தேர்தலிலும் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கின்றன. மாநிலக் கட்சிகளும் தேர்தலின் போது தேசியக் கட்சிகளை மாற்றி மாற்றி கூட்டணி வைக்கின்றன. இது சர்வ சாதாரணமாகியுள்ளது. அதை கூட மக்கள் பொறுத்துக் கொள்கின்றனர். ஆனால், தேர்தலின் போது ஒரு கூட்டணியில் உள்ள கட்சிகள், தேர்தலுக்குப் பிறகு அப்படியே எதிரணிக்கு ஆதரவு அளிக்க தாவுவது எந்த வகையில் சரி?

கர்நாடகாவில் கடந்த 2018-ம்ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. அப்போது மதச்சார்பற்ற ஜனதா தளத்தை, பாஜக.வின் ‘பி’ டீம் என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்தது. ‘‘லிங்காயத்து சமூகத்தினருக்கு முன்னாள் பிரதமரும் மஜத தலைவருமான தேவகவுடா தீங்கு செய்கிறார்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா விமர்சித்தார். அதற்கு, ‘‘கர்நாடகாவில் சித்தராமையா அரசுதான் மிகவும் ஊழல் நிறைந்த அரசு’’ என்று தேவகவுடா பதில் அளித்தார்.

ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு சூழ்நிலை தலைகீழாக மாறிவிட்டது. இரண்டு கட்சிகளும் சேர்ந்து கர்நாடகாவில் ஆட்சி அமைத்தன. இதில் குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற மஜத சார்பில் குமாரசாமி முதல்வர் பதவியேற்றார்.

கடந்த 2014-ம் ஆண்டு காஷ்மீர் தேர்தலில் பாஜக.வும் மெகபூபா முப்தியின் பிடிபியும் பரஸ்பரம் சரமாரி குற்றம் சாட்டிக் கொண்டன. காஷ்மீரில் நிலவும் வன்முறை, கலவரத்துக்கு நீதான் கார ணம் என்று கூறி இருதரப்பினரும் பரஸ் பரம் கருத்து மோதலில் ஈடுபட்டனர். பிரச் சாரத்திலும் இந்த ஒரு விஷயம்தான் பெரிதாக பேசப்பட்டது. ஆனால், தேர்தலுக்குப் பின்னர் இரு கட்சிகளும் சேர்ந்து மாநிலத்தில் ஆட்சி அமைத்தன. இப்போது கூட்டணி முறிந்துவிட்டது. மறுபடியும் இதே கூட்டணி ஏற்படாது என்பது என்ன நிச்சயம்?

டெல்லியில் காங்கிரஸ், பாஜக ஆகிய 2 தேசிய கட்சிகளையுமே எதிர்த்து ஆட்சியைப் பிடித்தது ஆம் ஆத்மி கட்சி. இப்போது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது ஆம் ஆத்மி. கூட்டணி அமைந்தால் யார் அதிர்ச்சி அடைய போவது?

மக்களவைத் தேர்தலில் உ.பி.மட்டுமன்றி வேறு எந்த மாநிலத்திலும் காங்கிரஸுடன் மாயாவதி கூட்டணி வைக்கவில்லை. ஆனால், தேர்தலுக்கு பிறகு ஒருசூழல் உருவானால், காங்கிரஸுடன் மாயாவதி கூட்டணி வைக்க மாட்டார் என்பதை எப்படி உறுதியாக சொல்ல முடியும்?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம்... ‘இல்லை’ என்பதுதான் பதில். அதனால்தான், தேர்தலுக்கு் பிந்தைய கூட்டணியை ஏற்கக்கூடாது. அதை ஊக்குவிக்க கூடாது என்ற கருத்து தற்போது மேலோங்கி உள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு தடை விதிக்க கோரி கடந்த 2014-ம் ஆண்டே உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக் குத் தொடரப்பட்டது. ராஜேந்திர தத் வாசுதேவ் என்பவர்தான், வழக்குத் தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், ‘‘தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர், வாக்காளர்களின் ஒப்புதல்இல்லாமல், வேறு ஒரு கூட்டணிக்கு அல்லது கட்சிக்கு ஆதரவு அளிக்க ஒப்புக் கொள்வது, வாக்காளர்களை ஏமாற்றும் செயலாகும்’’ என்று வலியுறுத்தி இருந்தார்.

அந்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

‘‘அரசியல் கட்சிகள் கூட்டணி சேர்வதை, மற்றவர்களுடன் இணைவதை எப்படி எங்களால் தடுக்க முடியும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்க முடியாது. மேலும், இந்தவிவகாரத்தில் தலையிடுவது, நாடாளுமன்றத்துக்கும் நீதித் துறைக்கும் இடையில் உரசலை அதிகரிக்கும். எனவே, இதுகுறித்த முடிவு எடுப்பது எல்லாம் அரசியல் கட்சிகளின் கைகளில்தான் இருக்கிறது’’ என்று கூறி மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

தற்போதைக்கு 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக.வுடன் கூட்டணி வைக்க கூடாது என்று ஒவ்வொரு மாநிலத்திலும் பிராந்திய கட்சிகள் முடிவெடுத்துள்ளன. அதற்கு காரணம் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிக பேரம் பேசுவதற்காகத்தான் என்கின்றனர்.

ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியைத் தடுக்க எந்தச் சட்டமும் இதுவரை இல்லை. இது சட்டப் பிரச்சினை மட்டுமல்ல... சமூக நெறிமுறை பிரச்சினை.

காஷ்மீரில் பிடிபி, கர்நாடகாவில் மஜத கட்சி களுக்கு மக்கள் வாக்களித்தார்கள் என்றால், பாஜக, காங்கிரஸுக்கு எதிராக வாக்களித்துள் ளனர் என்றுதான் அர்த்தம். அதேபோல் பாஜக, காங்கிரஸுக்கு மக்கள் வாக்களித்தார்கள் என்றால் மற்ற கட்சிகளுக்கு எதிராக வாக்களித் துள்ளனர் என்றுதான் அர்த்தம். ஆனால், தேர்தலுக்குப் பிறகு நிலைமை மாறிவிடுகிறது.

அதை தடுக்க தேர்தலுக்கு பின்பு ஆட்சி அமைக்கும் எண்ணிக்கைக்கேற்ப ‘கூட்டணி’ கள் மாறும் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் சொல்ல வேண்டும். இதுகுறித்து விவாதம் தொடங்கப்பட வேண்டும்.

இப்போதைய மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உட்பட பல கட்சிகளில் இருந்து முக்கியமானவர்கள் கட்சி தாவியுள்ளனர்.

தேர்தலுக்குப் பிறகு ஆட்சிஅமைக்க பாஜக, காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், புதிய கூட்டணிகள் உருவாகலாம். ‘‘இடதுசாரி கட்சிகளைத்தவிர பெரும்பாலான கட்சிகள்,எங்களுடன் கூட்டணி வைத்தவைதான்’’ என்று பாஜக.வினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

அதேபோல், தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைப்பதைத் தடுக்க மம்தா பானர்ஜியின் திரிணமூல், மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி ஆகியவை ஆதரவு அளிக்கும் என்ற நம்பிக்கை காங்கிரஸுக்கு இருக்கலாம்.

இரண்டுமே நடக்காவிட்டால், மம்தா, மாயாவதி, அகிலேஷ் போன்றவர்கள் ஆட்சி அமைக்க வழிவிட்டு அவர்களுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முன் வரலாம்.

ஆனால், அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.. என்று எளிதில்சொல்லிவிட்டு இனி கடந்து செல்ல முடியாது. கேள்விகள் பலமாக எழுகின்றன. விவாதங்கள் கடுமையாக நடக்கின்றன. துணிந்தவர்கள் உச்ச நீதி மன்றத்தின் கதவை தட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் நாடாளுமன்றமே பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வரும்.. வரவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x