

நிதாரி கொலை வழக்கில் சுரேந்தர் கோலிக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை அக்டோபர் 29 வரை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டது.
கடந்த 2006-ம் ஆண்டு டெல்லி நொய்டாவை அடுத்த நிதாரியில் 14 வயது சிறுமி ரிம்பா ஹல்தர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது, சுரேந்தர் கோலி மற்றும் தொழிலதிபர் மொணீந்தர் சிங் பாந்தர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் வீட்டருகே தோண்டியபோது ஏராளமான சிறுமிகளின் எலும்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. குற்றம்சாட்டப்பட்ட இருவர் மீதும் 16 வழக்குகள் தொடரப்பட்டன. இதில் ஐந்து வழக்குகளில் இருவருக்கும் சிபிஐ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தபோது, மொணீந்தர் சிங் பாந்தர் விடுவிக்கப்பட்டார். சுரேந்தர் கோலியின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தன. அவர் தாக்கல் செய்த கருணை மனுவை குடியரசுத் தலைவர் கடந்த ஜூலை 27-ம் தேதி நிராகரித்தார்.
இதையடுத்து சுரேந்தர் கோலியை திங்கள்கிழமை அதிகாலையில் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதற்காக, அவர் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள தாஸ்னா சிறையில் இருந்து, மீரட் சிறைக்கு கடந்த 4-ம் தேதி மாற்றப்பட்டார்.
இதனிடையே, தூக்கு தண்டனைக்கு எதிரான சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் நீதிபதிகள் தத்து, அனில் தவே அடங்கிய அமர்வு, தூக்கு தண்டனைக்கு ஒருவாரம் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவு ஞாயிற்றுக்கிழமை இரவு மீரட் சிறை அதிகாரிகளுக்கு மாவட்ட மாஜிஸ்திரேட் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சுரேந்தர் கோலியின் தூக்கு தண்டனை இரவோடு இரவாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கோலியின் சீராய்வு மனு மீதான விசாரணை அக்டோபர் 28-ஆம் தேதி நடைபெறும் என்பதால், அவரது தூக்கு தண்டனையை அக்டோபர் 29 வரை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தூக்கு தண்டனை கைதிகள் குறித்த சீராய்வு மனுவை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு வெளிப்படையாக நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கோலி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.