Last Updated : 23 Apr, 2019 12:00 AM

 

Published : 23 Apr 2019 12:00 AM
Last Updated : 23 Apr 2019 12:00 AM

தீவிரவாதிகளுக்காக கண்ணீர் வடிக்கிறார்: சோனியா மீது அமித் ஷா கடும் தாக்கு

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பாஜக தலைவர் அமித் ஷா கூறியதாவது:2008-ல் பட்லா ஹவுஸில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின்போது சில போலீஸாரும் இறந்தனர். ஆனால் அந்த போலீஸாரைப் பற்றிக் கவலைப்படாமல் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்காக கண்ணீர் வடித்தவர் சோனியா. ஏழை மக்களுக்காக பாடுபடும் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ், இதுவரை அந்த ஏழை மக்களின் நலனுக்காக எதையுமே செய்யவில்லை.

தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறிவருகிறார். மேற்கு வங்கத்தில் பாஜகவும், தேர்தல் ஆணையமும் இணைந்து தனியாக ஓர் அரசாங்கத்தை நடத்தி வருவதாக மம்தா கூறுகிறார். அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. மம்தா கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக செயல்பட விடாமல் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தடுக்கிறார்கள். இதனால்தான் மம்தா பொய்யான குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையத்தின் மீது கூறி வருகிறார்.

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த ஆவணங்களில் அவரது குடியுரிமை பற்றி முரண்பாடான தகவல்கள் உள்ளன. இது தேர்தல் அதிகாரி சம்பந்தப்பட்ட விஷயம். இதை அவர் கவனித்துக் கொள்வார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 23-ல் பாஜக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x