மேற்கு வங்கத்தில் வன்முறைகளுக்கிடையே பதிவான 52.36 சதவீத ஓட்டுக்கள்: மதியம் 1 மணிக்குள் விறுவிறு

மேற்கு வங்கத்தில் வன்முறைகளுக்கிடையே பதிவான 52.36 சதவீத ஓட்டுக்கள்: மதியம் 1 மணிக்குள் விறுவிறு
Updated on
2 min read

மேற்கு வங்கத்தில் எட்டு மக்களவைத் தொகுதிகளில் பரவலான வன்முறை சம்பவங்களுக்கிடையே மதியம் 1 மணிக்குள்ளாகவே 52.36 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் மக்களவைத் தேர்தலில் மொத்தம் 1,34,56,491 வாக்காளர்கள் பஹரம்பூர், கிருஷ்ணாகர், ராணாகட் (தனி), பர்ட்வன் கிழக்கு (தனி), பர்ட்வன்-துர்காபூர், அசன்சோல், சோல்பூர் (தனி) மற்றும் பிர்பம் ஆகிய எட்டு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் 68 வேட்பாளர்களின் தலைவிதியைத் தீர்மானிக்க உள்ளனர்.

ஒரு மூத்த தேர்தல் அதிகாரி இதுகுறித்து தெரிவிக்கையில், போட்டிக் கட்சிகளின் ஆதரவாளர்களிடையே மோதல்கள் வெடித்தன. பிர்பூம் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த நானூர், ராம்புராத், நல்ஹாதி மற்றும் சியூரி பகுதிகளில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களால் வாக்குப்பதிவு சிறிதுநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்படவேண்டிய சூழல் ஏற்பட்டது.

அசன்சோலில் பாரபாணி வாக்குமையத்திற்கு உள்ளே எம்பியும் தற்போதைய அசன்சோல் தொகுதியின் பாஜக வேட்பாளருமான பாபுல் சுப்ரியோவுக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கும் இடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இவ்வாக்குப் பதிவு மையத்திற்கு வெளியே திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே மிகபெரிய மோதலாக வெடித்தது. இதனால் பாஜக எம்பி பாபுல் சுப்ரியோவின் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது.

காலை 7 மணி தொடங்கிய வாக்குப்பதிவு முதல் இரண்டு மணி நேரம் எந்தவித பிரச்சினையும் இன்றி அமைதியாக நடைபெற்றது. ஆனால் அதன்பின்னர் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் குறித்த செய்திவரத் தொடங்கின. தற்போது எங்கள் அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர். சுதந்திரமான ஒரு நியாயமான தேர்தலை நடத்துவதற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு மூத்த தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

வாக்கு சதவீத விவரங்கள்

மேற்கு வங்கத்தின் எட்டு தொகுதிகளிலும் வாக்களிப்பு சதவீதம் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவிக்கையில், ''இன்று மதியம் 1 மணி வரையிலும் பஹ்ராம்பூரில் பதிவான வாக்குகளின் சதவீதம் 53.51 ஆகும். கிருஷ்ணாகரில் 51.39 சதவீதம். ராணாகட்டில் (தனி) 52.27 சதவீதம். பர்ட்வான் கிழக்கு தனி 55.47 சதவீதம், பர்ட்வான் துர்க்காபூர் 50.87 சதவீதம், அசன்சோலில் 49.98 சதவீதம், போல்பூர் தனி தொகுதியில் 50.82 சதவீதம் மற்றும் பீர்பூமில் 54.60 சதவீதம் பதிவானது.

மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் மக்களவைத் தேர்தல் சுதந்திரமான நியாயமான தேர்தலை உறுதி செய்யும்விதமாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  எட்டுத் தொகுதிகளிலும் மொத்தம் 580 கம்பெனி துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

விரும்பத்தகாத சம்பவங்கள் அங்கங்கே நடைபெற்றுவந்தாலும் அவற்றை மீறி எட்டுத் தொகுதிகளிலும் சராசரியாக 52.36 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.''

இவ்வாறு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

எட்டுத் தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ், திரிணாமூல் மற்றும் கம்யூனிஸ்ட்கள் என நான்குமுனை போட்டிகள் களத்தில் சந்திக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in