

கத்தோலிக்க தேவாலயத்தின் பிஷப், கேரளாவின் மிகவும் மூத்த மனிதர், பிலிப்ஸ் மார் க்ரைஸ்டோஸ்டம் இன்று தனது 102-வது பிறந்த நாளை திருவல்லா தேவாலயத்தில் கொண்டாடினார்.
மத்திய அரசின் பத்மபூஷண் விருது பெற்ற மூத்த பிஷப் பிலிப்ஸ் மார் க்ரைஸ்டோஸ்டம் இன்று 102-வது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினார். இவ்விழாவின் முக்கிய அம்சமாக இதற்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சுவை மிகுந்த அப்பத்தை வெட்டினார்.
கேரளா முழுவதிலும் இருந்து ஏராளமான ஆயர்களும், மதகுருக்களும் இன்று திருவல்லா தேவாலயத்திற்கு வந்திருந்தனர். தேவாலயத்தில் பிலிப்ஸைச் சந்தித்து தங்களது வாழ்த்துகளை நேரில் தெரிவித்தனர்.
பிலிப்ஸ், கேரளாவின் திருவல்லா நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட மலங்கரா மார் தோமா சிரியன் தேவாலயத்தில் 1944-ல் பாதிரியாராக தனது இறைப்பணியைத் தொடங்கினார். 1953-ல் பிஷப்பாக பதவி உயர்வு பெற்றார். பின்னர், 1997-ல் தேவாலயத் தலைவராக பொறுப்பேற்றார். அதன்பின், 2007-ல் சர்ச் பணிகளிலிருந்து தானாக முன்வந்து ஓய்வுபெறும் வரை தொடர்ந்து பொறுப்பு வகித்து வந்தார்.
ஓய்வு பெற்ற நிலையிலும்கூட தனது வயதான நிலையில் சக்கர நாற்காலியில் தேவாலயத்தை வலம் வந்தவாறே அதன் சேவைப் பணிகளில் பிஷப் பிலிப்ஸ் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
பிலிப்ஸ் மார் க்ரைஸ்டோஸ்டமுக்கு சென்ற ஆண்டு பத்மபூஷண் விருது அளித்து கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.