Last Updated : 14 Apr, 2019 05:48 PM

 

Published : 14 Apr 2019 05:48 PM
Last Updated : 14 Apr 2019 05:48 PM

வாக்கு எந்திர விவகாரம்; தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கையில்லை: உச்ச நீதிமன்றத்தை நாடும் எதிர்க்கட்சிகள்

மின்னணு வாக்கு எந்திரங்களில் ஏற்பட்டு வரும் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, நாடு முழுவதும் குறைந்தபட்சம் 50 சதவீதம் ஒப்புகை தணிக்கைச் சீட்டு எந்திரங்கள் மூலம வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முதல் கட்டத் தேர்தல் கடந்த 11-ம் தேதி 91 தொகுதிகளுக்கு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இதில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு எந்திரங்களில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டு மறுநாள் காலை வரை வாக்கு எண்ணிக்கை நடந்தது.

இதையடுத்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் இன்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 50 சதவீதம் ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடத்தி,அதன் மூலம் வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்குப் பின் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் கூறுகையில், "நாட்டில் உள்ள தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்டுள்ள குளறுபடி பிரச்சினைகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு மூலம் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தினால்தான் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். அதில்தான் துல்லியத்தன்மை, வெளிப்படைத்தன்மை தெரியவரும்.

வளர்ந்த நாடுகளான ஜெர்மனியில் கடந்த 2005 முதல் 2009-ம் ஆண்டு தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு அதில் கோளாறுகள் இருந்ததால் மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்குத் திரும்பிவிட்டனர். நெதர்லாந்து நாடும் கடந்த 1990-2007 ஆம் ஆண்டுவரை மின்னணு வாக்கு எந்திரங்களை தேர்தலில் பயன்படுத்தி பின்னர் வாக்குச்சீட்டு முறைக்கும், அயர்லாந்தும் 2002-04 ஆம் ஆண்டு மின்னணு வாக்கு எந்திரத்தில் இருந்து மாறி, வாக்குச்சீட்டு முறைக்கு வந்துவிட்டது.

மின்னணு வாக்கு எந்திரங்களின் மூலம ஏராளமான தவறுகள் நடக்கின்றன. மிகப்பெரிய குழப்பம், குளறுபடிகள் முதல் கட்டத் தேர்தலில் நடந்துள்ளன. 4,583 மின்னணு வாக்கு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாகத் தகவல்கள் வந்தன. ஆனால் ஆந்திரப் பிரதேச தேர்தல் அதிகாரி அதை மறுக்கிறார்.

தேர்தல் ஆணையம் இதுபோன்று பொறுப்பற்ற தன்மையுடன், உணர்வற்று, தீவிரத்தன்மை தெரியாமல் நடந்துகொண்டதை பார்த்தது இல்லை. ஜனநாயக்ததை கேலிக்கூத்தாக மாற்றுகிறார்கள். தேர்தல் ஆணையமே, பாஜக கிளை அலுவலகம் போல் செயல்படுகிறது" எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், "எந்தவிதமான ஆய்வும், சோதனையும் இன்றி லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் நீண்ட புகார்களை அளித்துள்ளன. ஆதலால், தேர்தல் வாக்குப்பதிவின் போதும், வாக்கு எண்ணிக்கையின்போது, ஒவ்வொரு சட்டப்பேரவையிலும் குறைந்தபட்சம் 50 சதவீதம் ஒப்புகை சீட்டு வாக்கு எந்திரம் பயன்படுத்த வேண்டும். இதுதொடர்பாக உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தை அணுக இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில், " மின்னணு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தைப் பயன்படுத்த ஒரு கட்சி மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஏனென்றால், மின்னணு வாக்கு எந்திரங்கள் மூலம் தில்லுமுல்லுகள் எளிதாக செய்ய முடியும் என்று நம்புகிறது அந்தக் கட்சி" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x