

மேற்கு வங்கத்தில் 20 வயது பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிர்பும் மாவட்டம், சுபல்பூர் கிராமத்தில் உள்ள 20 வயதான பழங்குடியினப் பெண், வேறொரு சமூகப் பிரிவை சேர்ந்த ஆண் ஒருவரை காதலித்தார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதத்தை, பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் விதித்தார். அத்தொகையை செலுத்தாத பெண்ணை கட்டி வைத்து அடித்து பாலியல் பலாத்காரம் செய்ய பஞ்சாயத்து தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த ஜனவரி 21-ம் தேதி அந்த பெண்ணை, பஞ்சாயத்து தலைவர் உட்பட 13 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போல்பூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணையில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ஷம்சுல் ஜோஹா ஆஜரானார்.
31 சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள், மருத்துவ அறிக்கைகள் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து 13 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சித்தார்த் ராய் சவுத்ரி நேற்று உத்தரவிட்டார். இந்த வழக்கில் 8 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.