Last Updated : 10 Apr, 2019 12:00 AM

 

Published : 10 Apr 2019 12:00 AM
Last Updated : 10 Apr 2019 12:00 AM

தமிழகத்தின் பல கோயில்களில் கடவுள் சிலைகள் திருடப்பட்டுவிட்டன; கோயிலை நிர்வாகம் செய்வது அரசுக்கு தேவையா?- கோயில்களை பக்தர்களே நிர்வகிக்க உச்ச நீதிமன்றம் யோசனை

கோயில்களை பக்தர்கள்தான் நிர்வகிக்கவேண்டும். கோயில் நிர்வாகம் அரசுக்குத் தேவையா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஒடிசா மாநிலம் புரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகன்னாதர் ஆலயத்தில் மோசமான நிர்வாகத்தால் பக்தர்கள் கோயிலை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க கோயில் நிர்வாகம் தவறிவிட்டது. கோயிலில் தரிசனத்துக்கு பக்தர்கள் செல்வதற்கு ஒழுங்கான வரிசை முறையை கூட ஏற்படுத்த அரசு நிர்வாகம் தவறிவிட்டது என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கோயில் நிர்வாகம், மதம் சம்பந்தமான இடங்களின் நிர்வாகத்தை மாநில அரசுகள் ஏன் எடுத்துக் கொள்கின்றன? கோயில்களை ஏன் அரசு அதிகாரிகள் நிர்வகிக்கிறார்கள்? கோயில்களின் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைக்கலாம்.

பல்வேறு மாநில அரசுகள், கோயில் நிர்வாகத்தைச் செய்யும் பணிகளில் தவறுகளை இழைத்துள்ளன. தமிழகத்தில் உள்ள 1,500 ஆண்டு கால பழமையான சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம், 2014-ல் உச்ச நீதிமன்ற உத்தரவால் மாநில அரசிடமிருந்து எடுக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தின் பல கோயில்களில் கடவுள் சிலைகள் திருடப்பட்டுவிட்டன. அரசு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை? கடவுள் சிலைகள் விலைமதிப்பற்றவை.

இந்த வழக்கில் புரி ஜெகன்னாதர் கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை யாரிடம் வழங்குவது என்பது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்கும் என்றனர்.

முன்னதாக புரியிலுள்ள கோவர்தன் மடாதிபதி ஜெகத்குரு சங்கராச்சார்யர் ஸ்ரீ நிஷ்சலானந்தா சரஸ்வதி சுவாமிகள் சார்பில் வழக்கறிஞர் சுசித் மொஹந்தி ஆஜராகி வாதாடினார். அவர் கூறும்போது, “இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்கு ஜெகத்குரு தயாராக இருக்கிறார். கோயிலில் அரசு அதிகாரிகள் தலையிட்டு மதரீதியான விவகாரங்களுக்குத் தடையாக இருக்கிறார்கள். இதனால் கோயிலில் பல்வேறு குழப்பங்கள் நடந்தன.

குறிப்பாக தரிசனத்தின்போது வரிசையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் அவதிக்குள்ளாயினர்” என்றார்.

மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி கூறும்போது, “நீதிமன்றத்தின் கருத்தை ஏற்றுக்கொள்கிறோம். அதேபோல மாநில அரசு சார்பில் யாரும் கோயில் விஷயங்களில் குறுக்கிடக்கூடாது” என்றார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x