Last Updated : 12 Apr, 2019 03:16 PM

 

Published : 12 Apr 2019 03:16 PM
Last Updated : 12 Apr 2019 03:16 PM

மோடி, ஜேட்லி, பாஜக நிலைப்பாட்டை தகர்த்துவிட்டது உச்ச நீதிமன்றம்: யெச்சூரி விமர்சனம்

தேர்தல் நிதிப்பத்திரங்களில் நிதி வழங்கியோர் விவரங்களை  அரசியல் கட்சிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தி்ன் உத்தரவு மோடி,ஜேட்லி, பாஜகவின் நிலைப்பாட்டை தகர்த்துவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்

தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாயிலாக நிதி அளிப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், நிதிபத்திரங்களில் நிதி வழங்கியவர்களின் முழு விவரங்கள், நன்கொடை வழங்கியவர்கள் ஆகியோரின் விவரங்களை தேர்தல் ஆணையத்தில் வரும் மே 30-ம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் கறுப்புப்பணம் தேர்தலில் புழங்குவது தடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறி வந்த நிலையில், இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ட்விட்டரில் கூறுகையில், " தேர்தல் நிதிப்பத்திரங்கள் ரகசிய பத்திரங்கள் என்று கூறி நிதி மசோதாவாக மத்திய அரசு தாக்கல் செய்தது. மோடி, ஜேட்லி, மற்றும் பாஜகவின் இந்த நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தகர்த்திருக்கிறது. தேர்தல் நிதிவழங்களில் வெளிப்படைத்தன்மை என்பது அடிப்படை கொள்கையாகும். எந்த கட்சி எங்கிருந்து எவ்வளவு நிதியை யாரிடம் இருந்து பெறுகிறது என்பதை அறிந்து கொள்ள மக்களுக்கு உரிமை இருக்கிறது.

அடையாளம் தெரியாதவர்களை பாஜக தேர்தல் நிதி அளிக்க பயன்படுத்தியது. கறுப்புபணம் வைத்திருப்பவர்கள் இந்த வழியில் தேர்தல் நிதி வழங்க அஞ்சுவார்கள். இன்று தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் புள்ளிவிவரங்கள், நாளை மக்களிடமும் இருக்கும் " எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறியதாவது:

தேர்தல் நிதிப் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பாஜகவுக்கும், பணம்படைத்த பெரிய தொழிலதிபர்கள் நண்பர்களுக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்திவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம், வரவேற்கிறோம். அரசியல் கட்சிகளுக்கு நிதிவழங்குவதில் வெளிப்படைத்தன்மை இருப்பதையும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என்பதையும் தொடர்ந்து வலியுறத்தி வருகிறோம்.

பாஜக ஆட்சிக்கு வரும்போது அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்படும் என்று தெரிவித்தது, ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தையும் குறைத்து மதிப்பிட்ட பாஜக, ஊழல் கண்காணிப்பு அமைப்பின் செயல்பாட்டை முடக்கியது.

எவ்வாறு தேர்தல் நிதியை பெற்றோம் என்று பாஜக மக்களுக்கு விளக்கும் என்று நம்புகிறோம். கோடீஸ்வர தொழிலதிபர்களுக்கும், பாஜக அரசுக்கும் கடந்த 5 ஆண்டுகளாக இருந்த உறவால் நாட்டுக்கு எந்தவிதமான வளர்ச்சியும் இல்லை. ஆனால், 5 நட்சத்திர தலைமையகம் தங்களுக்காக பாஜக அமைத்துக்கொண்டது " எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x