நீங்கள் மனித குலத்துக்கு ஒரு இழுக்கு: ஆசம்கான் பேச்சுக்கு குஷ்பு காட்டம்

நீங்கள் மனித குலத்துக்கு ஒரு இழுக்கு: ஆசம்கான் பேச்சுக்கு குஷ்பு காட்டம்
Updated on
1 min read

ஜெயப்பிரதா குறித்து ஆசம்கானின் பேச்சுக்கு, குஷ்பு தனது கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார் சமாஜ்வாதி கட்சயின் ஆசம்கான். அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா. இவர் சமாஜ்வாதி கட்சியிலிருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்தவர். இருவருமே தங்களது பிரச்சாரத்தில் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகிறார்கள்.

ஏப்ரல் 14-ம் தேதி ஆசம்கான் தனது பிரச்சாரத்தின் போது ஜெயப்பிரதாவின் ஆடையைப் பற்றி மோசமாக விமர்சித்தார். இது தொடர்பாக அவருக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பும் அளவுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆசம்கான் பேச்சுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

ஆசம்கான் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''ஆசம்கான். நீங்கள் மனித குலத்துக்கு ஒரு இழுக்கு. உங்களைப் போன்ற ஆண்கள், ஆதிக்கத்தை நிறுவ எந்த நிலைக்கும் தரம் தாழ்ந்து செல்வார்கள் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.

ஜெயப்பிரதாவுக்கு எதிராக நீங்கள் பேசிய வார்த்தைகள் உங்கள் தராதரத்தையும், மலிவான பெண் வெறுப்பு மனப்பான்மையையும் காட்டுகிறது. தன்னிலையில் இருக்கும், பெண்களை சிறிதளவேனும் மதிக்கும் எந்த ஆணும் இப்படியான வார்த்தைகளைச் சொல்ல மாட்டார்கள்'' என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in