

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தை தேர்தல் முடிந்த பின் திரையிட அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் ‘பி.எம்.நரேந்திர மோடி’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடியாக நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 11-ம் தேதி வெளியாவதாக இருந்தது.
தேர்தல் நேரத்தில் இந்தப் படத்தை வெளியிடுவது நடத்தை விதிகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேர்தல் முடியும் வரை படத்தை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் கடந்த 10-ம் தேதி தடை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் படத் தயாரிப்பாளர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘பி.எம்.நரேந்திர மோடி’ படத்தை தேர்தல் ஆணையம் பார்த்துவிட்டு படத்தை வெளியிடலாமா? என்பது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும் இதுபற்றி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதன்படி, படத்தை பார்த்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ‘சீல்’ வைக்கப்பட்ட கவரில் தங்கள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்தனர். அறிக்கையின் நகலை படத் தயாரிப்பாளருக்கு வழங்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது தொடர்பாக 26-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் முக்கிய அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், " உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் பிரதமர் மோடியின் திரைப்படத்தைப் பார்த்துள்ளனர். அந்தத் திரைப்படம் இப்போது ரிலீஸ். ஆனால், நிச்சயம் குறிப்பிட்ட(பாஜக) கட்சிக்கு மிக சாதகமான போக்கு மக்களிடம் ஏற்படும். ஆதலால், தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளனர்.
கடைசிக்கட்டத் தேர்தல் மே 19-ம் தேதி நடக்கிறது. அந்த வாக்குப்பதிவு முடிந்த பின் மோடி திரைப்படத்தை திரையிட அனுமதிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளது. அந்த திரைப்படத்தில் மோடி குறித்து மிகவும் புகழ்ந்து எடுக்கப்பட்டு, அவருக்கு இணையாக யாரும் இல்லாத வகையில் பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரும் வெள்ளிக்கிழமை முடிவு எடுக்கிறது.