Last Updated : 17 Apr, 2019 12:00 AM

 

Published : 17 Apr 2019 12:00 AM
Last Updated : 17 Apr 2019 12:00 AM

கர்நாடகாவில் பிரச்சாரம் ஓய்ந்தது: 14 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் 2 கட்டங் களாக நடைபெறுகிறது. இதில் காங்கிரஸும், மஜதவும் கூட்டணி அமைத்து களம் காணும் நிலையில் பாஜக, பகுஜன் சமாஜ் உள்ளிட்டவை தனித்து களம் காண்கின்றன. இங்கு மொத்தமுள்ள‌ 28 தொகுதிகளில் காங்கிரஸ் 21, மஜத 7, பாஜக 27 போட்டியிடுகின்றன. பாஜக மண்டியாவில் சுயேச்சை வேட்பாளர் சுமலதாவுக்கு ஆதரவு அளித்துள்ளது.

முதல்கட்டமாக உடுப்பி, ஹாசன், தென்கன்னடம், சித்ரதுர்கா, தும்கூரு, மண்டியா, மைசூரு, சாமராஜ்நகர், ஊரக பெங்களூரு, வட பெங்களூரு, மத்திய பெங்களூரு, தென் பெங்களூரு, சிக்க‌பள்ளாப்பூர், கோலார் ஆகிய 14 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ், பாஜக, மஜத, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் உட்பட 241 பேர் களம் காண்கின்றனர். குறிப்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர்கள் சதானந்த கவுடா (பாஜக), வீரப்ப மொய்லி (காங்கிரஸ்), நடிகர் பிரகாஷ் ராஜ் (சுயேச்சை) உள்ளிட்டோர் போட்டியில் உள்ளனர். பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மாநில தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இதே போல காங்கிரஸ் - மஜத கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி பிரச்சாரம் செய்தார்.

14 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதால் நேற்று மாலை 6 மணியுடன் பகிரங்க பிரச்சாரம் நிறைவடைந்த‌து. வாக்குப்பதிவு நடைபெறுவதால் 14 தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே கடைசி நேர பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே சோதனைச் சாவடி அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x